கரோனா வைரஸ் தொற்று குறித்து மக்களவையில் நடந்த கலந்துரையாடல் ஒன்றில் பதிலளித்த ஹர்ஷ் வர்தன், இந்தியாவில் இதுவரை 6.37 கோடி கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றும், இதனால் உலகில் அதிக எண்ணிக்கையில் கரோனா பரிசோதனை நடத்தப்பட்ட நாடுகளில் இந்தியா முதலிடம் வகிக்கலாம் என்றும் ஹர்ஷ் வர்தன் தெரிவித்துள்ளார்.
மேலும், இதுவரை இந்தியாவில் மட்டும் கிட்டத்தட்ட 2,000 கரோனா வைரஸ் மரபணுக்கள் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன என்றும், கரோனா பரவலைக் கட்டுப்படுத்தவும் தொற்றுநோயை எதிர்த்துப் போராடவும் மேற்கொள்ளப்பட்ட தொடர் நடவடிக்கைகள் குறித்தும் அவர் பட்டியலிட்டுள்ளார்.
அதில், ”விமான நிலையங்களில் 15 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பரிசோதிக்கப்பட்டுள்ளனர். நேபாளத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்ட முதல் நபர் கண்டறியப்பட்டபோது, எல்லையில் 16 லட்சம் பேருக்கு கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
ஆரம்ப நாட்களில் இந்த நோய் குறித்து மருத்துவர்களுக்கே போதிய தகவல்கள் தெரியவில்லை. இருப்பினும், இரண்டு முதல் மூன்று மில்லியனுக்கும் அதிகமானோர் தற்போது திறன் மேம்பாட்டில் பயிற்சி பெற்றுள்ளனர்.
கரோனா ஊரடங்கின் பலன்கள், குறைபாடுகள் குறித்து பலரும் கருத்துக்கள் தெரிவித்து வருகின்றனர். கரோனாவால் பாதிப்புகளிலிருந்து மீண்டவர்கள், தவிர்க்கப்பட்ட இறப்புகள் குறித்து ஐந்து ஆய்வுகள் நடத்தப்பட்டு அவை குறித்த அறிக்கைகள் வெளிவந்துள்ளன.