கரோனா வைரஸ் பெருந்தொற்று பரவலைத் தடுப்பதற்காகப் பிரதமர் மோடி அடுத்த 21 நாள்களுக்கு நாடு முழுவதும் முழு ஊரடங்கு உத்தரவை அறிவித்துள்ளார். இதையடுத்து, இன்றுமுதல் இரவு ஊரடங்கு அமலுக்கு வருமென தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் தெரிவித்துள்ளார்.
இதன்படி, மாலை 7 மணி முதல் காலை 6 மணி வரை மக்கள் தேவையில்லாமல் வெளியில் வரக் கூடாது. ஏதேனும் தேவையிருந்தால் 100-க்கு அழைத்து பிரச்னையை தெரிவித்தால், வாகனம் வீடு தேடிவரும் எனத் தெரிவித்தார். ஊடரங்கு பிறப்பித்த பின்னரும், மக்களில் சிலர் வெளியில் தேவையின்றி நடமாடுகின்றனர்.
அதுபோன்று சுற்றித் திரிபவர்களால் கரோனா வைரஸ் பெருந்தொற்று பரவலாம். இதனால், தேவையின்றி சுற்றித்திரிபவர்களைக் கட்டுப்படுத்த அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்த உத்தரவு பிறப்பிக்க வேண்டியிருக்கும். இந்த நிலைமையை மக்கள் ஏற்படுத்தாமலிருக்க வேண்டும் என வேண்டுகோள்விடுத்தார். தேவைப்பட்டால் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர ராணுவத்தை அழைக்கவுள்ளதாகவும் கடுமையாக எச்சரித்துள்ளார்.