மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் கீழ் நாடு முழுவதும் 21 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளிகள் செயல்பட்டுவருகின்றன. இந்தப் பள்ளிகள் தொடர்பான அனைத்து சட்டப்பூர்வமான ஏற்பாடுகளும் ஆண்டுதோறும் புதுப்பிக்கப்பட வேண்டும்.
சிபிஎஸ்இ பள்ளிகள் அங்கீகாரம் பெறுதல், முன்னதாக பெற்ற அங்கீகாரத்தைப் புதுப்பித்தல், புதிதாக தொடங்கவுள்ள சிபிஎஸ்இ பள்ளிக்கு அனுமதிப் பெறுதல், சிபிஎஸ்இ பள்ளியோடு வேறொரு பள்ளியை இணைத்து விரிவாக்கம் செய்வது போன்ற அனைத்துவிதமான நடவடிக்கைகள் மேற்கொள்ளவும் சிபிஎஸ்இ இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டியது அவசியமாகும். அந்த வகையில் ஒவ்வோர் ஆண்டும் ஜனவரி முதல் பிப்ரவரி மாதம்வரை அங்கீகாரம் பெற பள்ளிகளுக்கு அவகாசம் வழங்கப்பட்டுவந்தது.
இந்தாண்டு பிப்ரவரி மாதத்தில் பெரும்பாலான பள்ளிகள் இவற்றை மேற்கொள்ளாமல் இருந்ததால் அப்பள்ளிகளுக்கான விண்ணப்பிக்கும் கால அவகாசம் மாா்ச் 31ஆம் தேதிவரை நீட்டிப்புசெய்யப்பட்டது.
இந்நிலையில், கரோனா வைரஸ் பீதி காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கீகாரத்தைப் புதுப்பிப்பதற்கான விண்ணப்பத்தைத் தாக்கல் செய்வதற்கு அவகாசம் ஏப்ரல் 30ஆம் தேதிவரை மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளதாக கடந்த மாதம் 25ஆம் தேதி மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் அறிவித்தது.