ஈடிவி பாரத்-தின் அர்ஷ்தீப் கவுருக்கு அளித்த பிரத்யேக நேர்காணலில், 65 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்களுக்கு தபால் வாக்குச்சீட்டைப் பயன்படுத்த அனுமதிப்பது, தேர்தல்களில் தொற்றுநோயின் தாக்கம், நடவடிக்கைகளைத் தணித்தல் மற்றும் டிஜிட்டல் பரப்புரை காலங்களில் மாதிரி நடத்தை விதிகளை (MCC) அமல்படுத்துவது குறித்து சுனில் அரோரா பேசினார்.
பிரத்யேக நேர்காணலின் தமிழாக்கத்தின் சில பகுதிகள்:
வேகமாக பரவி வரும் தொற்றுநோய்க்கு மத்தியில், ஆணையம் 2020 ஜூன் மாதம் மாநிலங்களவைத் தேர்தலை நடத்தியது. அப்போது நீங்கள் எதிர்கொண்ட சவால்களைப் பகிர்ந்து கொள்ள முடியுமா?
மாநிலங்களவையில் தேர்தல் ஆணையம் 19.06.2020 அன்று 8 மாநிலங்களில் 19 இடங்களுக்கு வெற்றிகரமாக தேர்தல்களை நடத்தியது. வாக்கெடுப்பு செயல்முறை கோவிட்-19 கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுடன் தடையின்றி ஒருங்கிணைக்கப்பட்டது. இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல் படி, அனைத்து மாநில அரசாங்கங்களும் கோவிட்-19 கட்டுப்பாடுகளுக்கு உடன்பட்டு ஒரு நோடல் அதிகாரியை நியமித்தன.
அதன்படி, வாக்கெடுப்பு நாளில், ஏறக்குறைய 1000 வாக்காளர்களில், கோவிட்-19 உறுதிப்படுத்தப்பட்ட ஒரே ஒரு வாக்காளர் (மத்திய பிரதேசத்தில்) மட்டுமே பதிவாகியுள்ளது. மற்ற அனைத்து வாக்காளர்களும் வாக்களித்த பின்னர் அவர் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டார்.
கோவிட்-19 பாதிப்பு இருக்கலாம் என சந்தேகத்திற்குரிய ஒரு வாக்காளர் இருப்பதாக ராஜஸ்தானில் இருந்து தெரிவிக்கப்பட்டது, மற்ற வாக்காளர்கள் வாக்களித்த பின்னர் அவர் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டார். வாக்காளர்களிடையே மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர் என்று யாருமே இல்லை என்றாலும், அத்தகைய நிலைமைக்கு தயாராக சிறப்பு வசதிகளை ஆணையம் செய்திருந்தது.
நாட்டில் கோவிட்-19 தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இத்தகைய சூழ்நிலையில் பிகார் சட்டமன்றத் தேர்தலும் மக்களவை இடைத்தேர்தலும் நடத்தப்படுமா? வாக்காளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக நீங்கள் எந்த அளவு தயார் நிலையில் இருக்கிறீர்கள்?
பிகார் சட்டமன்றத் தேர்தல்களை சரியான நேரத்தில் நடத்துவதற்கான தேவையான ஏற்பாடுகள் இந்திய தேர்தல் ஆணையம், பிகார் தலைமை தேர்தல் அதிகாரி மற்றும் மாவட்ட அளவில் நடைபெற்று வருகின்றன.
அனைத்து ஏற்பாட்டியல் (logistics) மற்றும் தொற்றுநோய்களின் நிலைமை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு தேர்தல் அட்டவணை உருவாக்கப்படும்.
தொற்றுநோய்களின் போது, தகுந்த இடைவெளி மற்றும் சுத்திகரிப்புக்கான தேவையான ஏற்பாடுகளை உறுதி செய்வதற்காக தேர்தல் செயல்முறைகளுக்கான அனைத்து வழிமுறைகளும் பொருத்தமான முறையில் மாற்றப்படும்.
சம்பந்தப்பட்ட அனைவரும், குறிப்பாக அரசியல் கட்சிகள் தங்கள் பரப்புரையின்போது தொடர்புடைய பாதுகாப்பு வழிகாட்டுதல்களை கூட்டாக உறுதி செய்ய வேண்டும்.
தேர்தல் நடைமுறை, வாக்காளர்கள், அரசியல் கட்சிகள், வேட்பாளர்கள் மற்றும் பிற பங்குதாரர்கள் தொடர்பான இந்திய தேர்தல் ஆணைய வழிகாட்டுதல்கள் மாற்றப்படுகின்றன. தேர்தலின் பல்வேறு கட்டங்களில் நடைமுறைகளை மறு மதிப்பீடு செய்வது குறித்து ஆணையத்தின் அதிகாரிகள் குழுவினரால் செய்யப்பட்டு வருகிறது.
மொத்த குறுஞ்செய்தி உள்ளிட்ட மின்னணு மற்றும் ஊடக தளங்களையும், சமூக ஊடகங்களையும் ஆணையம் அதிக அளவில் பயன்படுத்தும். கோவிட்-19 கட்டாயங்களை பிரதிபலிக்கும் வகையில் வாக்காளருக்கான வழிகாட்டி முறைகள் புதுப்பிக்கப்படும்.
ஒரு வாக்குச் சாவடிக்கு வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகபட்சமாக ஆயிரமாக (தற்போதைய வரம்பு 1500க்கு மாறாக) கட்டுப்படுத்தப்படும் என்றும் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
துணை வாக்குச் சாவடிகள் உருவாக்கப்படும் - உதாரணமாக பிகாரில் 33,797 கூடுதல் வாக்குச் சாவடிகள் உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது.
மூத்த குடிமக்கள் (இப்போது 65 வயதிலிருந்து), மாற்றுத்திறனாளிகள் மற்றும் வீடு அல்லது நிறுவன தனிமைப்படுத்தலில் இருக்கக்கூடிய கோவிட் பாதிப்பு வாக்காளர்கள் போன்ற பிரிவினருக்கு தபால் வாக்குகளைப் பயன்படுத்துதல் மூலம் தேர்தல் நாளன்று பாதிக்கப்படக்கூடிய பிரிவு மக்களை தேவையற்ற ஆபத்துக்கு ஆளாகாமல் இருப்பதை உறுதிப்படுத்த உதவும்
சட்டசபை பரப்புரை பேரணிகளிலும் மற்றும் வாக்களிக்கும் நாளன்றும் அதிக மக்கள் கூட்டம் இருக்கும், சுகாதார அபாயத்தைக் குறைக்க தேர்தல் ஆணையம் என்ன நடவடிக்கைகள் எடுக்க உள்ளது. மெய்நிகர் பேரணிகளில் மாதிரி நடத்தை விதிகளை எவ்வாறு செயல்படுத்துவீர்கள்?
கோவிட்-19 வழிகாட்டுதல்களின் பின்னணியில் பொது பரப்புரைகள் குறித்து தேசிய மற்றும் சம்பந்தப்பட்ட மாநில அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் கருத்துக்களை ஆணையம் கேட்டுள்ளது. பிகார் தலைமை தேர்தல் அதிகாரி அனுப்பிய அரசியல் கட்சிகளின் கருத்துகளையும் நாங்கள் ஆராய்ந்து வருகிறோம். பேரணிகளில் பொதுக்கூட்டத்தைப் பொருத்தவரை, கோவிட் 19 வழிகாட்டுதல்கள், தகுந்த இடைவெளி போன்ற குறிப்பிட்ட விதிமுறைகளை ஏற்கனவே பரிந்துரைத்துள்ளோம், அவற்றை மீறுவது தேசிய பேரிடர் மேலாண்மை சட்டம், 2005-ன் படி குற்றமாகும். தேர்தல் பரப்புரையை கண்காணிக்க இந்திய தேர்தல் ஆணையம் தேவையான ஏற்பாடுகளை செய்துள்ளது.
ஒவ்வொரு வேட்பாளரும் வேட்புமனு தாக்கல் செய்யும் நேரத்தில் தங்கள் சமூக ஊடக கணக்குகளின் விவரங்களை வழங்க வேண்டும்.
தேர்தல் பரப்புரை இன்னும் தொடங்கப்படாததால், 'அரசியல் கட்சிகள் இப்போது டிஜிட்டல் பரப்புரை மற்றும் மெய்நிகர் பேரணிகளை' தற்போது மேற்கொண்டுள்ளன. அவற்றை இனிமேல் தான் சோதிக்க வேண்டும்.
செலவின உச்சவரம்புக்கு உட்பட்டு வேட்பாளர்கள் மெய்நிகர் பிரச்சாரத்தை எந்த அளவிற்குப் பயன்படுத்துவார்கள் என்பதைப் பார்க்க வேண்டும். அரசியல் கட்சியின் பிரச்சாரங்களுக்கு எந்தவொரு செலவின கட்டுப்பாடுகள் இல்லாததால், செலவு உச்சவரம்பு என்பது அரசியல் கட்சிகளை பாதிக்காது.
65 வயதிற்கு மேற்பட்டவர்களை அனுமதிக்கும் முடிவை சில கட்சிகள் எதிர்கின்றன, மேலும் கோவிட் நோயாளிகள் மற்றும் தொற்று இருக்கலாம் என சந்தேகிக்கப்படும் நபர்கள் இது போன்ற ரகசிய விதிமுறையை மீறக்கூடும். இது குறித்த உங்கள் கருத்துக்கள் என்ன?
பேரிடர் மேலாண்மைச் சட்டம், 2005-ன் கீழ் தேசிய செயற்குழு வெளியிட்டுள்ள வழிகாட்டுதல்கள், பாதிக்கப்படக்கூடிய நபர்கள், 65 வயதுக்கு மேற்பட்டவர்கள், நோயுற்ற நபர்கள், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் போன்றவர்கள் அத்தியாவசிய தேவைகளைப் பூர்த்தி செய்ய மற்றும் உடல் ஆரோக்கிய தேவைகள் தவிர, மற்றபடி வீட்டில் தங்கியிருக்க வேண்டும்.
இந்த அசாதாரண சூழ்நிலைகளை ஆணையம் கருத்தில் கொண்டு, தபால் வாக்குச் சீட்டு வசதிகளை எளிதில் அடையாளம் காணக்கூடிய இரண்டு வகைகளுக்கு நீட்டிக்க பரிந்துரை செய்ய முடிவு செய்ததுள்ளது: (அ) 65 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள்; மற்றும் (ஆ) கோவிட்-19 தொற்று/ சந்தேக நபர்களைக் கொண்ட வாக்காளர்கள், அவர்கள் வாக்குச் சாவடிக்கு வருவதை தவிர்ப்பதற்காக தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர், அதனால் அவர்களின் வாக்குரிமை பறிக்கப்பட கூடாது.
தபால் வாக்குச் சீட்டு வாக்களிப்பின் முழு செயல்முறையும் பணியில் உள்ள வாக்குச் சாவடி ஊழியர்களின் மேற்பார்வையின் கீழ் இருக்கும், மேலும் முழு செயல்முறையும் வீடியோ எடுக்கப்பட்டு வேட்பாளர்களுக்கு தெரிவிக்கப்படும். எனவே ஒவ்வொரு அஞ்சல் வாக்குகளும் மிகவும் பாதுகாப்பானவை மற்றும் வெளிப்படையானவை.
உண்மையில், இப்போது 65 வயதுடைய வாக்காளர்களுக்கும் நீட்டிக்கப்பட்ட அஞ்சல் வாக்களிப்பு வசதியைப் பாராட்டி மூத்த குடிமக்கள் சங்கங்களின் கூட்டமைப்புகளிடமிருந்து ஆணைக்குழு ஒரு அறிக்கையை பெற்றுள்ளது,
ஒட்டுமொத்தமாக, தொற்றுநோய் காரணமாக தேர்தல் செயல்பாட்டில் ஏற்பட்டுள்ள மாற்றத்தை நீங்கள் எவ்வாறு பார்க்கிறீர்கள்?
கோவிட்-19 தொற்றுநோய் தேர்தல்கள் உட்பட வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்தையும் பாதித்துள்ளது. இது நம் அனைவருக்கும் புதிய சவால்களை தந்துள்ளது. இந்த சூழலில், தேர்தல்களை நடத்துவது எளிதானது அல்ல. முன்கூட்டியே திட்டமிட்டு தேவையானவற்றை ஏற்பாடு செய்து கொள்வது வெற்றிகரமாக நடத்துவதற்கு முக்கியமாக இருக்கும்.
சமீபத்தில் நடைபெற்ற மாநிலங்களவைத் தேர்தலில், அளவு சிறியதாக இருந்தபோதிலும், எங்கள் புதிய நிலையான இயக்க முறைகள் (SOP) சோதனைக்கு உட்படுத்தப்பட்டு தற்போது அனுபவத்துக்கேற்ப மாற்றியமைக்கப்படுகின்றன.
சட்டமன்ற தேர்தல்களுக்குத் தேவையான மாற்றங்களின் எற்பாட்டியல்கள் வலுவானதாக இருக்க வேண்டும் என்பதை ஆணையத்தால் முழுமையாக உணர முடிகிறது.
பயணத் தடைகள் குறித்த உங்கள் அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள முடியுமா? அமெரிக்காவிலிருந்து முடிவெடுப்பது என்று எப்படி உறுதி செய்யப்பட்டது?
2020 ஆம் ஆண்டு ஏப்ரல் 4ஆம் தேதிக்குள் திரும்புவதற்கான திட்டங்களுடன் நான் இந்த ஆண்டு மார்ச் 7ஆம் தேதி மிச்சிகன் புறப்பட்டபோது விமானம் மூலம் சர்வதேச பயணம் உள்ளிட்ட இயக்கத்தின் மீதான கட்டுப்பாடுகளை எதிர்பார்க்கவில்லை. தொற்று அதிகரித்ததால் எதிர்பாராத தடைகள் நடைமுறைக்கு வந்தாலும், ஆணைக்குழுவின் வேலைகள் பாதிப்பதை அனுமதிக்க முடியாது.
இந்த நாட்களில் தொழில்நுட்பம் பல தடைகளை நிவர்த்தி செய்கிறது மற்றும் கடல்கள் கடந்து கூட தொடர்பு தடைகளை தீர்க்க உதவுகிறது. மாறுபட்ட நேர மண்டலங்கள் இருந்தபோதிலும் அலுவலக ஊழியர்களுடன் தொடர்பில் இருக்கவும் சரியான நேரத்தில் நடவடிக்கை எடுக்கவும் என்னால் முடிந்தது.
வழக்கமான சிக்கல்களைத் தவிர, மகாராஷ்டிரா சட்டப்பேரவையில் காலியாக உள்ள ஒன்பது இடங்களுக்கு இடைத்தேர்தலை நடத்த திட்டமிடுவதற்கு மே 1, 2020 அன்று அமெரிக்காவிலிருந்து வீடியோ கான்பரன்சிங் மூலம் முழு கமிஷன் கூட்டத்தை என்னால் நடத்த முடிந்தது.
இதையும் படிங்க:ZyCoV-D: மனித பரிசோதனைக்கு தயாராகும் கரோனா தடுப்பு மருந்து!