உலக நாடுகளை அச்சுறுத்திவரும் கரோனா தீநுண்மியால் இதுவரை 40 லட்சத்து 13 ஆயிரத்து 896 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இரண்டு லட்சத்து 76 ஆயிரத்து 235 பேர் உயிரிழந்துள்ளனர். மருத்துவத் துறையில் சிறந்து விளங்கும் நாடுகளான அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின் ஆகிய நாடுகள்கூட இத்தொற்றைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறிவருகின்றன.
இந்த நிலையில், இந்தியாவிலும் இத்தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. இத்தொற்றின் தடுப்பு நடவடிக்கை தொடர்பாகப் பிரதமர் மோடி பல்வேறு நாட்டின் தலைவர்களுடன் ஆலோசனை நடத்திவருகிறார். அந்தவகையில், மோடி நேற்று இத்தாலி பிரதமர் கியூசெப் கோன்டேவுடன் தொலைபேசி வாயிலாக உரையாடினார்.
இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், இத்தாலியில் கரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். ஜி 20 மாநாட்டை பயன்படுத்தி கோவிட்-19 பிறகான உலகத்தில் ஏற்படும் சவால்களை இந்தியாவும் இத்தாலியும் ஒன்றிணைந்து எதிர்கொள்ளும் எனப் பதிவிட்டிருந்தார்.
இத்தாலியில் கரோனா தீநுண்மியால் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். கரோனாவால் அதிக உயிரிழப்புகள் ஏற்பட்ட நாடுகளின் பட்டியலில் இத்தாலி இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரையில், 59 ஆயிரத்து 622 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஆயிரத்து 981 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதையும் படிங்க:பணியாற்ற அனுமதியுங்கள் மோடிஜி - இந்திரா சேகர் சிங்