கரோனா தொற்றுக்கு இதுவரை முறையான மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. இதனால் கரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க ஆராய்ச்சியாளர்கள் பல முறைகளைக் கையாண்டுவருகின்றனர்.
அதன்படி, இந்தியாவில் முதலில் டெல்லியில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிளாஸ்மா சிகிச்சை அளிக்கும் முறை பின்பற்றப்பட்டது. இந்த முறையின்படி ஏற்கெனவே கரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் உடலில் இருந்து பிளாஸ்மாவை எடுத்து, தற்போது சிகிச்சை பெற்றுவருவபர்களின் உடலில் செலுத்தப்படும். இதன் மூலம் அவர்களது உடலில் ஆன்ட்டிபாடி உருவாகும் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.
இந்த சிகிச்சை முறை குறித்த ஆய்வு முடிவுகளை பிரிட்டிஷ் மெடிக்கல் ஜர்னல் வெளியிட்டுள்ளது. கரோனா தொற்றுக்கு பிளாஸ்மா சிகிச்சை அளிப்பதன் மூலம் ஓரளவு நன்மை ஏற்படுவதாக அதில் முடிவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலகட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 464 பேரின் சிகிச்சை குறித்த தரவுகள் இதில் கணக்கிடப்பட்டுள்ளன. அவர்களில் 239 பேருக்கு பிளாஸ்மா சிகிச்சையும் 229 பேருக்கு சாதாரண சிகிச்சையும் அளிக்கப்பட்டுள்ளது.