கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள் குறித்த தரவுகளை ஆவணப்படுத்தும் ஒரு பயிற்சியை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தொடங்கியுள்ளது.
இந்தத் தரவைப் பெறுவதற்கு, தற்போதுள்ள தரவு தளத்தைப் பயன்படுத்தி இந்தியாவில் கரோனா தொற்றிலிருந்து மீண்ட நோயாளிகளுடன் தொலைபேசி உரையாடல்களை நடத்துவதன் மூலம் என்.சி.டி.சி (நோய்களுக்கான தேசிய மையம்) ஒரு கணக்கெடுப்பை மேற்கொள்ளும்.
இந்தியாவில் கரோனா தொற்றிலிருந்து சுமார் 35 லட்சத்து 42 ஆயிரத்து 663 பேர் மீண்டு வீடு திரும்பியுள்ளனர். மகாராஷ்டிரா, கர்நாடகா, உத்தரப் பிரதேசம், தமிழ்நாடு, ஆந்திரா போன்ற ஐந்து மாநிலங்களிலிருந்து தினசரி கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 60 விழுக்காடு பதிவாகியுள்ளதாக சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் தெரிவித்துள்ளது.
உத்தரகாண்ட்
உத்தரகாண்ட் சட்டமன்றத்தின் பருவமழை கூட்டத்தொடர் செப்டம்பர் 23ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில் கரோனாவால் பல எம்.எல்.ஏக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், கரோனா வைரஸ் தொற்று முன்பு இல்லாத அளவுக்கு தற்போது உத்தரகாண்ட்டில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
கடந்த இரண்டு நாள்களில் தொடர்ச்சியாக 1,000க்கும் மேற்பட்டோர் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். பல எம்.எல்.ஏக்கள், அமைச்சர்களும் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேநேரத்தில் ஆளும் பாஜகவின் இரண்டு சட்டமன்ற உறுப்பினர்கள், வேகமாக பரவி வரும் கரோனா தொற்று நோயைக் கட்டுப்படுத்த மாநிலத்தில் ஊரடங்கு நீட்டிக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.