வைரஸ் மரபணு இதுவரை 198 மாற்றங்களைச் செய்துள்ளது. (இது பச்சோந்திக்கு தாத்தா போல இருக்கிறது). சார்ஸ் கோவ்- II ன் இந்த மரபணுக்களில் 198 மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன என்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இதற்காக 7,500 பேரிடம் விஞ்ஞானிகள் ஒரு ஆராய்ச்சியை மேற்கொண்டு மரபணுக்கள் பல வடிவங்களாக மாறுகின்றன என்பதை நிறுவியுள்ளனர்.
சிகிச்சைக்கான மருந்தைக் கண்டுபிடிப்பதற்கும், வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த ஒரு தடுப்பூசியைத் தயாரிப்பதற்கும், இந்த ஆய்வு உதவும். லண்டன் பல்கலைக்கழக கல்லூரி ஆராய்ச்சியாளர்களால் எழுதப்பட்ட இது தொடர்பான ஒரு ஆய்வுக் கட்டுரை “ஜர்னல் இன்ஃபெக்சன்” என்ற இதழில் வெளியிடப்பட்டுள்ளது.
மனித உடலில் வைரஸ் எவ்வாறு தொடர்ந்து இருக்கிறது என்பது குறித்தும், மரபணுக்களின் மாற்றங்கள் மற்றும் அது தொடர்புடையப் பிற தகவல்கள் குறித்தும் விஞ்ஞானிகள் தொடர்ந்து ஆய்வு செய்துவருகின்றனர். குறிப்பாக, மனித உடலில் வைரஸ் தாக்கம் அதிகமாக உள்ள பகுதிகளில் ஏற்படும் மாற்றங்களை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
அந்த வகையில், உடலில் 198 மாற்றங்கள் நிகழ்ந்ததைக் கண்டறிந்தனர். இதனால், மனித உடலில் பொதுவாக நிகழும் உயிரணுக்களின் மாற்றங்களுக்கு ஏற்ப மரபணுக்கள் பல வடிவங்களாக மாறுகின்றன என்பது தெளிவாகிறது. இயற்கையாகவே, வைரஸ் மனிதர்களைத் தாக்கும்போது, பல மாற்றங்களை மேற்கொள்ளும் என்பது பொதுவான கருத்தாக இருக்கிறது.