கரோனா சர்வதேச தொற்றுப் பரவலுக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை சரிவரக் கையாளாமல் அலட்சியம் காட்டியதால் அமெரிக்கா இன்று பெரும் இழப்புகளை சந்தித்து வருகிறது. 10 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் இதுவரை அமெரிக்காவில் கரோனாவால் பாதிக்கப்பட்டும், 55 ஆயிரம் பேர் உயிரிழந்தும் உள்ளனர்.
இவ்வாறு பிற வளர்ந்த நாடுகள் போல் அல்லாமல், ஆரம்பம் முதலே அவற்றை உற்று நோக்கி வந்த இந்தியா, முன்கூட்டியே சுதாரித்து 40 நாட்கள் ஊரடங்கு அறிவித்து, 130 கோடி மக்களை வீடுகளுக்குள்ளேயே கட்டிப்போட்டது. ஆனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் திறம்பட கையாளப்பட்டாலும், தங்கள் வீடுகளுக்குத் திரும்ப முடியாமல் தவித்து வரும் பிற மாநிலத் தொழிலாளர்களின் நிலை நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி கவலைக்கு உள்ளாக்கியுள்ளது.
தங்கள் கிராமங்களையும் குடும்பங்களையும் விட்டுவிட்டு வாழ்வாதாரத்தைத் தேடி வெவ்வேறு மாநிலங்களுக்கு குடிபெயர்ந்த லட்சக்கணக்கான தொழிலாளர்கள், வேலை இழந்து, அடிப்படை வசதிகளின்றி நடந்தே சொந்த ஊர் திரும்பும் அவலம் நிலவி வருகிறது.
ஊரடங்கு அறிவித்த முதல் சில தினங்களில், உத்தரப் பிரதேசம், பீகார் மற்றும் ராஜஸ்தான் அரசுகள் புலம்பெயர்ந்த தொழிலாளர்களை தங்கள் சொந்த ஊர்களுக்கு அழைத்து வர பேருந்துகளை இயக்கியன. தொடர்ந்து ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால் தொழிலாளர்களை மீட்டு வருவதை ஒத்திவைத்த மாநில அரசுகள் ஊரடங்கு முடிந்ததும் அவர்களை மீட்டு வருவதற்கான ஆயத்தப் பணிகளை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளன.
சமீபத்தில் நந்தேடில் சிக்கித் தவிக்கும் 3,800 சீக்கிய யாத்ரீகர்களை தங்கள் சொந்த ஊர்களுக்கு அழைத்துச் செல்ல மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளதைத் தொடர்ந்து, உத்தரப் பிரதேசம், பீகார், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், குஜராத் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த மூன்றரை லட்சத்திற்கும் மேலான தொழிலாளர்களை, அவர்களது சொந்த மாநிலங்களுக்கு செல்ல அனுமதிக்கத் தயாராக இருப்பதாக தற்போது மகாராஷ்டிரா அரசு அறிவித்துள்ளது.
தொடர்ந்து பல மாநிலங்கள் தொழிலாளர்களை மீட்க முன்வரும் நிலையில், விதிகள் தளர்த்தப்பட்டு லட்சணக்கானவர்கள் பயணிக்கும்போது கரோனா தொற்றுப் பரவலுக்கான வாய்ப்புகள் மிக மிக அதிகம் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.