கோவிட்-19 நோய்த் தொற்றுக்கு எதிரான போரில், மிக அதிகளவிலான சோதனைகள்தான் முக்கிய ஆயுதமாக இருக்கும் என்று மூன்று மாதங்களுக்கு முன் உலகச் சுகாதார மையம் வலியுறுத்தியது. சோதனைக் கருவிகளைக் கொள்முதல் செய்வதிலும் உருவாக்குவதிலும் இந்தியா அதிகக் கவனம் செலுத்தும் நிலையிலும், தற்போது நாள் ஒன்றுக்கு 1 லட்சத்து 50 ஆயிரம் என்ற அளவில்தான் சோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
குணமடைவோர் எண்ணிக்கை 52.47 விழுக்காடு என்பது ஆறுதல் அளிப்பதாக இருந்தாலும், நீண்ட கால உடல்நலப் பாதிப்பு கொண்டவர்களை (இதய நோய்கள், சிறுநீரகம் மற்றும் நுரையீரல் பாதிப்புகள், நீரிழிவு, ரத்த அழுத்தம் ஆகிய நோய்களைக் கொண்டவர்கள்) கரோனா மிகக் கடுமையாக தாக்கி பாதிப்புகளை மேலும் மோசமாக்குகிறது என்ற உண்மையும் அதிர்ச்சியளிக்கிறது.
உலகளவில் 170 கோடி மக்கள் (மொத்த மக்கள் தொகையில் 20 விழுக்காடு) கரோனாவால் கடுமையாகப் பாதிக்கப்படுவதாக ஆய்வு தெரிவிக்கிறது. இந்த விவகாரத்தில் சி.சி.எம்.பி. இயக்குநரின் பரிந்துரைகள் மிகப் பயனளிப்பதாக உள்ளன.
சி.எஸ்.ஐ.ஆர். – செல்லுலார் மற்றும் மூலக்கூறு உயிரியல் (சிசிஎம்பி) இயக்குநர் ராகேஷ் மிஷ்ரா இது குறித்து குறிப்பிடும்போது, ஆசியாவின் மிகப் பெரிய குடிசைப்பகுதியான தாராவியில் மிக அதிகளவில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகள்தான், அங்கு நோய்த் தொற்று கட்டுப்படுத்தப்பட்டதற்கு மிக முக்கியக் காரணம் என்கிறார்.
இந்தியாவில் நாளொன்றுக்கு 10 லட்சம் மாதிரிகள் சோதனை செய்யப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்துகிறார். தற்போது இந்த நோய்த் தொற்று சோதனை செய்யப் பயன்படும் ஆர்டி-பிசிஆர் கருவிகளின் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. மேலும் இறக்குமதி செய்யப்படும் ஆர்டி-பிசிஆர் கருவிகளின் அதிகப்படியான விலையால் சிக்கல்கள் எழுந்துள்ளன.
இதற்குத் தீர்வாக, சி.சி.எம்.பி. தற்போது மலிவான விலையில் பிசிஆர் சோதனை செயல்முறையை வடிவமைத்து, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஒப்புதலுக்காகக் காத்திருக்கிறது. இதற்கிடையே, கோவிட்-19 சோதனையை அரை மணி நேரத்தில் மேற்கொள்ளும் ஆர்டி-எல்ஏஎம்பி முறையை என்ஐஎம்எஸ், இ.எஸ்.ஐ. மற்றும் டி.ஐ.எஃப்.ஆர். வடிவமைத்துள்ளன.