உலகளாவிய பெருந்தொற்றுநோயான கோவிட்-19 பாதிப்பு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் வேகமாகப் பரவிவருகிறது. மூன்றாம் கட்டப் பரவலை அடையும் நிலையில், அதன் தாக்கம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. கரோனா பரவலைக் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க சில தளர்வுகளுடன் மத்திய அரசின் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. போக்குவரத்து தடைசெய்யப்பட்டு, 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக நாட்டின் விமான நிறுவனங்கள் கடும் பொருளாதார நெருக்கடிக்குள்ளாகி நிற்பதாக அறியமுடிகிறது. பல்வேறு நிறுவனங்கள் ஆள்குறைப்பு, சம்பளக் குறைப்பு நடவடிக்கைகளில் இறங்கியுள்ளன. அந்த வகையில், இண்டிகோ நிறுவனம், விஸ்டாரா ஆகியவை அதன் ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கல் முறையில் பல்வேறு மாற்றங்களை நடைமுறைப்படுத்தி உள்ளன.
இது தொடர்பாக இண்டிகோ நிறுவனம் தனது ஊழியர்களுக்கு அனுப்பிய மின்னஞ்சலில், "பயிற்சி விமானிகள் முதல் அலுவலர்கள் வரையிலான சம்பள திருத்தம் ஜூலை 1ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும். தற்போது, மேலும் 5.5 நாள்கள் சம்பளமில்லாத விடுமுறை அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதாவது ஏற்கனவே உள்ள 10 நாள்களுடன் இதையும் இணைக்கிறோம். இது குறித்து மேலும் தகவல் அறிய மனிதவள மேலாளர் குழுவினரைத் தொடர்பு கொள்ளலாம்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மின்னஞ்சல் குறித்து இண்டிகோ செய்தித் தொடர்பாளரிடம் நமது ஈடிவி பாரத் பேசியபோது, "கரோனா ஊரடங்கு, உலகளாவிய பயணத்தடை, வணிக சீர்குலைவு என நெருக்கடிகள் இருந்தபோதும் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் ஊழியர்களுக்கான முழு சம்பளத்தை வழங்கிய உலகளவில் ஒரு சில விமான நிறுவனங்களில் இண்டிகோவும் ஒன்றாகும். மே மாதத்தில் நாங்கள் முதல் சம்பளமில்லா விடுமுறை உத்தியை கைக்கொள்ள வேண்டிய சூழல் ஏற்பட்டது.