உலக நாடுகளை அச்சுறுத்திவரும் கரோனா வைரஸ் பெருந்தொற்று இந்தியாவையும் விட்டுவைக்கவில்லை. இப்பெருந்தொற்றால் நாட்டில் நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்நிலையில், மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட தகவலின்படி நாட்டில் நேற்று ஒரே நாளில் 3,967 பேருக்கு கரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டது. அதிகபட்சமாக நேற்று மகாராஷ்டிராவில் 1,602 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனால், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 81,970ஆக அதிகரித்துள்ளது. அதேசமயம் நேற்று 100 பேர் உயிரிழந்துள்ளனர். அதிலும் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 44 பேரும், குஜராத்தில் 20 பேரும் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,649ஆக உயர்ந்துள்ளது.
மேலும் இந்த வைரஸால் பாதிக்கப்பட்ட 1,685 பேர் நேற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 27,920ஆக அதிகரித்துள்ளது. நாட்டில் கரோனாவால் மகாராஷ்டிராவில்தான் அதிக பாதிப்புகளும் உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளன. மகாராஷ்டிராவில் இதுவரை 27,524 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 1,019 பேர் உயிரிழந்துள்ளனர்; 6,059 பேர் குணமடைந்துள்ளனர்.
இதையடுத்து, தமிழ்நாட்டில் நேற்று 447 பாதிப்புகள் ஏற்பட்டன. இதன்மூலம், அதிக பாதிப்புகளான மாநிலங்களின் பட்டியலில் இரண்டாம் இடத்திலிருந்த குஜராத்தை, தற்போது தமிழ்நாடு முந்தியுள்ளது. தமிழ்நாட்டில் 9,674 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 66 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 2,240 பேர் குணமடைந்துள்ளனர்.
இதையும் படிங்க:தொடரும் குடிபெயர்ந்த தொழிலாளர்கள் விபத்துகள்: உ.பி.யில் இருவர் பலி