மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட தகவலின்படி, நாட்டில் நேற்று ஒருநாளில் 3,900 பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நிலையில், 195 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். நாட்டில் ஒரேநாளில் இத்தொற்றால் இத்தனை பேர் பாதிக்கப்பட்டதும் உயிரிழந்ததும் இதுவே முதல்முறையாகும்.
அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 1,567 பேரும், தமிழ்நாட்டில் 527 பேரும், குஜராத்தில் 376 பேரும், டெல்லியில் 349 பேரும், மேற்கு வங்கத்தில் 296 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களைப் பொறுத்தவரையில் அதிகபட்சமாக நேற்று மேற்கு வங்கத்தில் 98 பேரும் மகாராஷ்டிராவில் 35 பேரும், குஜராத்தில் 29 பேரும் உயிரிழந்தனர்.
இதனால், நாட்டில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 46,433ஆகவும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1568ஆகவும் அதிகரித்துள்ளது. அதேசமயம் நேற்று ஒரேநாளில் இத்தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த 1,020 பேர் முழுமையாக குணமடைந்தனர். இதன்மூலம், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 12,727ஆக அதிகரித்துள்ளது.
தற்போது இத்தொற்றால் அதிக பாதிப்புகள், உயிரிழப்புகள் ஏற்பட்ட முதல் பத்து மாநிலங்களை குறித்தும், அதேசமயம் இத்தொற்றிலிருந்து வேகமாக மீண்டுவரும் முதல் 10 மாநிலங்கள் குறித்தும் பார்க்கலாம்.