நாள்தோறும் இந்தியாவில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை தீவிரமாக அதிகரித்து வருகிறது. இதைத்தடுக்க சுகாதாரத்துறை ஊழியர்கள் கடுமையாகப் போராடி வருகின்றனர். தங்களின் உயிரைப் பணயம் வைத்து, இவர்கள் போராடிவரும் நிலையில், கண்ணுக்குப்புலப்படாத, இந்த கோவிட்-19 எதிரி, இவர்களை பாதித்துவிடக்கூடாது என இவர்களின் வீட்டினர் பெரும் கவலை கொண்டுள்ளனர்.
சுகாதாரத்துறை ஊழியர்களின் இல்லத்தாரின் கவலையைப் போக்கும் விதமாக ஹைதராபாத்தைச் சேர்ந்த மூன்று இளைஞர்களான அஷ்பக், அப்துல் பாரி, சல்மான் ஆகியோர் சுகாதாரத்துறை ஊழியர்களின் பாதுகாப்பிற்குப் புதிய கண்டுபிடிப்பை மேற்கொண்டுள்ளனர்.
கரோனா பாதிப்பால் தனிமை வார்டில் வைக்கப்பட்டுள்ள நோயாளிகளைப் பராமரிக்கும் பணிக்காக மருத்துவப் பணியாளர்களுக்குப் பதிலாக, ரோபோக்களை பணியமர்த்தும் திட்டத்தை இவர்கள் முன்னெடுத்துள்ளனர்.
இந்த புதிய கண்டுபிடிப்பை தெலங்கானா மாநில தகவல் தொழில் நுட்ப அமைச்சர் கே.டி. ராமா ராவிடம்; இதுகுறித்தான திட்ட வடிவமைப்பை தாக்கல் செய்துள்ளனர்.
'வாக்கிங் ரோபட்' என்ற பெயரில் தயாரிக்கப்பட்ட, இந்த ரோபோவைத் தங்களின் கல்லூரி ப்ராஜெக்டுக்காக தயாரித்துள்ளனர். இந்தச் சூழலில் இது பயன்படும் விதமாக உருவெடுத்துள்ளதால், இதைப் பயன்படுத்திக்கொள்ளலாம் என அவர்கள் முன்மொழிந்துள்ளனர்.
அமைச்சர் இந்த வரைவை செயல்படுத்தும் சூழல்களை கண்டறிவதாக தெரிவித்துள்ளார்.
இதுவரை மெட்ரோ நகரங்களில் உள்ள வணிக வளாகங்கள் மற்றும் உணவகங்களில் ரோபோக்களைப் பயன்படுத்துவது வழக்கம். இந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி முக்கிய இடங்களில் மனிதர்களுக்குப் பதிலாக, ரோபோக்களைப் பயன்படுத்தும் செயல்திட்டங்களை மேற்கொள்வது எப்படி என்ற கண்டுபிடிப்பை தங்கள் கல்லூரி இறுதியாண்டின் ப்ராஜெக்டாக அந்த மாணவர்கள் வடிவமைத்துள்ளனர்.