நாடு முழுவதும் கரோனா தடுப்பு நடவடிக்கை முடக்கப்பட்டு வெளிநாட்டிலிருந்து வந்த பயணிகள் தீவிரக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். தனது வெளிநாட்டுப் பயண நடவடிக்கையை மறைத்துவைத்தால் அவர்கள் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனக் காவல் துறை சார்பில் தொடர்ச்சியாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் தெலங்கானாவில் காவல் துறை அலுவலர் ஒருவரே விதிமுறை மீறி தனது மகனின் பயணிகளின் விவரத்தை மறைத்த சம்பவம் அரங்கேறியுள்ளது. தெலங்கானா மாநிலத்தில் உள்ள பத்தராத்தி மாவட்டத்தில் உள்ள கொத்தகூடம் என்ற பகுதியின் காவல் துணைக் கண்காணிப்பாளர் எஸ்.எம். அலி. இவரது மகன் சில நாள்களுக்கு முன்பு லண்டன் நகரிலிருந்து திரும்பிவந்துள்ளார்.
கரோனா கட்டுப்பாடு நடவடிக்கையாக வெளிநாட்டுப் பயணிகள் இந்தியா வரும்போது தங்களது பயண விவரத்தை காவல் துறையிடம் அவசியம் தெரிவிக்க வேண்டும் என்ற விதிமுறை தற்போது உள்ளது. ஆனால் அலி தனது மகனின் பயண விவரத்தை மறைத்துவைத்து, பொது நிகழ்வுகளில் பங்கேற்கவும் அனுமதித்துள்ளார்.
இந்நிலையில் மகனுக்கு வைரஸ் அறிகுறி ஏற்பட, கரோனா கண்டறிதல் சோதனை மேற்கொள்ளப்பட்டது. சோதனையில் வைரஸ் உறுதியான சமயத்தில் காவல் துணைக் கண்காணிப்பாளரின் மகன் வெளிநாடு சென்றுவந்துள்ள விவரம் காவல் துறைக்குத் தெரியவந்துள்ளது.
உடனடியாகக் காவல் அலுவலர் மீது வழக்குத் தொடுத்த தெலங்கானா காவல் துறை, அலி, அவரது குடும்பத்தினர், வீட்டு ஊழியர்கள் ஆகியோரை 14 நாள்கள் வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டு இருக்க உத்தரவிட்டுள்ளது.