கரோனா பாதிப்பு எண்ணிக்கை இந்தியாவில் தற்போது 649ஆக உயர்ந்துள்ளது. பலியானோரின் எண்ணிக்கை 13ஆக உள்ள நிலையில் கரோனா பரவலை தடுக்க நாடு முழுவதும் ஏப்ரல் 21ஆம் தேதிவரை லாக் டவுன் அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்தக் காலகட்டத்தில் அத்தியாவசிய சேவைகள் மட்டுமே இயங்கும் என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை நாட்டில் 130 கோடி மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி சென்று சேர்வதற்கு வழிவகை செய்வதில் பல்வேறு நடைமுறை சிக்கல் உள்ளதாக பலரும் ஐயம் எழுப்பிவருகின்றனர். மேலும் மத்திய மாநில அரசுகள் ஒன்றிணைந்து நிலைமையை ஏப்ரல் 15ஆம் தேதிவரை தயார் நிலையில் வைக்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ள வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் உற்பத்தியாளர், பெரு வணிகர், சில்லறை வணிகர், போக்குவரத்து அமைப்பினர் ஆகியோரிடையே ஒருங்கிணைப்பை ஏற்படுத்தி அத்தியாவசிய பொருட்கள் இயக்கத்தை சிக்கலின்றி நடத்த 24 மணிநேர கண்காணிப்பு மையத்தை மத்திய அரசு நிறுவியுள்ளது.
இந்த மையம் நாடு முழுவதும் அத்தியாவசிய பொருட்கள் சரியான முறையில் பயனாளர்களுக்கு சென்று சேர்கிறதா என்பதை கட்டுபாட்டு அறையிலிருந்து தொடர் கண்காணிப்பில் ஈடுபடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வணிகர்கள் நேரடியாக களத்தில் சந்திக்கும் சிக்கல்களை controlroom-dpiit@gov.in என்ற மின்னஞ்சல் முகவரியிலோ அல்லது 011-23062487 தொலைபேசி எண் மூலமோ தெரிவிக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:சிறு, குறு நிறுவனங்களுக்கு மத்திய அரசின் சலுகைகள்!