இந்தியாவில் கோவிட்-19 தொற்றின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்துவருகிறது. கரோனா பரவலைக் குறைக்க மார்ச் 25ஆம் தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இருந்தபோதிலும், நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கரோனா தொற்று கட்டுக்குள் வரவில்லை.
தெலங்கானாவில் தொடர்ந்து ஏழாவது நாளாக கோவிட்-19 தொற்று காரணமாக உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. திங்கள்கிழமை கோவிட்-19 தொற்றால் தெலங்கானாவில் மூவர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் தெலங்கானாவில் கரோனா தொற்று காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 56ஆக உயர்ந்துள்ளது.
கடந்த இரண்டு வாரங்களில் அதிகபட்சமாக, திங்கள்கிழமை மட்டும் புதிதாக 66 பேருக்கு கோவிட்-19 உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் 18 பேர் வெளிநாட்டிலிருந்து திரும்பியவர்கள். இதன் மூலம் மாநிலத்தில் கரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,920ஆக உயர்ந்துள்ளது.