கரோனா அச்சுறுத்தல் காரணமாக மாநில அரசுகளால் முடக்கம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் பணிகளுக்குச் செல்ல முடியாத லட்சக்கணக்கான ஒப்பந்த ஊழியர்களின் வாழ்வாதார பாதுகாப்பை உறுதிசெய்வதற்காக மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கான ஊதியத்தை அவர்களுக்கு வழங்க மத்திய அரசு முடிவுசெய்துள்ளது.
மத்திய அரசின் அமைச்சகங்கள், அவற்றின் துணை அலுவலகங்களில் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்களுக்கும், குறிப்பிட்ட பணிகளுக்காக வேலையில் அமர்த்தப்பட்ட (அவுட்சோர்சிங்) ஊழியர்களுக்கும் வழக்கமாக அலுவலகத்திற்கு வர முடியாமல் போகும் நாள்களில் சம்பளம் பிடித்தம்செய்யப்படும்.
இந்நிலையில், லட்சக்கணக்கான இந்த ஊழியர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க மத்திய அரசு, இந்த முடிவு எடுத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
மத்திய அரசு நிறுவனங்களில் பணியில் அமர்த்தப்பட்ட அவுட்சோர்சிங் ஊழியர்களையும், மத்திய அரசின் கீழ் இயங்கும் துணை அமைப்புகள், தன்னாட்சி அமைப்புகள், பிற சட்டரீதியான அமைப்புகளின் ஊழியர்களையும் இந்த உத்தரவுஉள்ளடக்கும்.
கடந்த வாரம், கோவிட்-19 அச்சுறுத்தல் காரணமாக முடக்கப்பட்டிருப்பதால் அமைப்புசாரா தொழிலாளர்கள் மிகவும் பாதிக்கப்படக்கூடியவர்களாக இருப்பதால், அவர்களுக்குரிய ஊதியத்தை வழங்குமாறு பிரதமர் நரேந்திர மோடி வணிக சமூகத்திடம் வலியுறுத்தினார்.
கோவிட்-19: ஒப்பந்த ஊழியர்களுக்கு ஊதியம் வழங்க மத்திய அரசு முடிவு இது தொடர்பாக நிதி அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், "நடைமுறையில் உள்ள அசாதாரண சூழ்நிலைகளில் தொழிலாளர்களுக்கு ஏற்படும் இடர்களைத் தவிர்க்கும் தொலைநோக்கில், பணியில் இல்லாத காலகட்டத்தில் அவர்கள் 'கடமையில்' இருப்பதாகவே கருதப்படுவார்கள். அதற்கேற்ப தேவையான ஊதியம் வழங்க முடிவுசெய்யப்பட்டுள்ளது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொது விநியோகத் துறையின் திட்டத்தில் மாநிலங்கள் தங்களுக்குரிய உணவுப் பொருள்கள் ஒதுக்கீட்டளவில் மூன்று மாதங்களுக்குத் தேவையான உணவு தானியங்களை உயர்த்தி அளிக்குமாறு இந்திய உணவு நிறுவனத்திடம், மத்திய அரசு உத்தரவிட்டிருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இதையும் படிங்க :மத்தியப் பிரதேச முதலமைச்சராக சிவராஜ் சிங் சவுகான் பதவியேற்றார்