தலைநகர் டெல்லியில் கரோனா தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் அங்கு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று (09-06-2020) மட்டும் டெல்லியில் ஆயிரத்து 366 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால், அம்மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 31 ஆயிரத்து 309ஆக உயர்ந்துள்ளது.
டெல்லி துணை முதலமைச்சர் சிசோடியாவும், டெல்லி சுகாதார அமைச்சர் சத்யேந்திர ஜெய்னும் சேர்ந்து சமூகப் பரவல் இல்லை எனக் கூறி வந்தாலும், அதிகரிக்கும் கரோனா தொற்று இக்கருத்தின் நம்பகத்தன்மையைக் குலைக்கிறது.
இதனிடையே, டெல்லி அரசின் கீழ் இயங்கி வரும் மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகள், நர்சிங் ஹோம்களில் உரிய ஆவணங்கள் கொண்ட டெல்லி வாழ் மக்களுக்கு மட்டுமே சிகிச்சை அளிக்க வேண்டும் என அம்மாநில அரசு முன்னதாக அதிரடி உத்தரவு பிறப்பித்தது. இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், அச்சட்டத்தை ரத்து செய்து டெல்லி துணை நிலை ஆளுநர் அனில் பைஜால் உத்தரவு பிறப்பித்தார்.
இரு வேறு உத்தரவுகளில் எதனைப் பின்பற்றுவது என்பதில் குழப்பம் ஏற்பட்ட நிலையில், ஆளுநரின் உத்தரவு பின்பற்றப்படும் என அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். தற்போது, இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை இரண்டு லட்சத்து 76 ஆயிரத்து 583ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: மருத்துவமனை விவகாரத்தில் ஆளுநரின் உத்தரவு பின்பற்றப்படும் - அரவிந்த் கெஜ்ரிவால்