கோவிட்-19 எனும் கரோனா பரவலை தடுப்பதற்காக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் 25ஆம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டதுடன் பேருந்து, ரயில், விமான சேவைகள் முற்றிலும் பாதிக்கப்பட்டன. ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் வீடுகளிலேயே முடங்கிக் கிடந்த குழந்தைகள், இளைஞர்கள் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளானதாக ஆராய்ச்சியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இது குறித்து ஆராய்ச்சியாளர்கள் கூறுகையில், "கோவிட்-19 காலக்கட்டத்தில் வீடுகளிலேயே முடங்கிக் கிடந்த குழந்தைகள், இளைஞர்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகினர். தேவையற்ற எண்ணங்கள், உணர்ச்சிகள் தொடர்ந்து மனதில் எழக்கூடிய ஒசிடி (obsessive-compulsive disorder) என்ற மனநோயால் சிறியவர்கள் முதல் பெரியர்கள் வரை பாதிப்படைந்தனர்.
ஒசிடி என்பது பல்வேறு விதமாக மருத்துவ வெளிப்பாடுகளைக் கொண்ட நோய் என்று டென்மார்க்கில் உள்ள ஆர்ஹஸ் பல்கலைக்கழக ஆய்வு ஆசிரியர் ஜூடித் நிசென் கூறியிருக்கிறார். இது போன்ற நோய், குழந்தைகளின் எதிர்காலத்தை பாதிக்கும். ஒசிடி குறித்து கண்டறிய, 7 மற்றும் 21 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் இரண்டு குழுக்களுக்கு கேள்வித்தாள் ஒன்றை ஆராய்ச்சியாளர்கள் அனுப்பினர்.
அதில், 120 குழந்தைகள் அந்த கேள்விகளுக்கு பதிலளித்தனர். பின்னர், ஒரு குழுவைச் சேர்ந்த குழந்தைகளுக்கு ஒசிடி இருப்பது கண்டறியப்பட்டது. அதையடுத்து, அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். முதல் குழுவில் பங்கேற்ற பெரும்பாலான குழந்தைகள், கோவிட்-19 காலத்தில் எங்களது சிந்தனைகள் மோசமடைந்ததாக கூறினர். மூன்றில் ஒரு பங்கு குழந்தைகள் மன உளைச்சலுக்கு ஆளானதாக கூறினார்.
இரண்டாவது குழுவில் பங்கேற்ற குழந்தைகளில் 73 விழுக்காட்டினர் எங்களுடைய நிலை மோசமடைந்ததாகவும், 43 விழுக்காட்டினர் மனச்சோர்வு அடைந்ததாகவும், பாதிக்கும் மேற்பட்டோர் கவலை அடைந்ததாகவும் கூறினர். குறிப்பாக, சிறு வயதிலேயே ஒசிடியால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் எதிர்காலம் மிகவும் மோசமாக இருக்கும்" என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.