உலகளவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் கரோனா வைரஸ் பெருந்தொற்று பாதிப்பால் இதுவரை 210 நாடுகளைச் சேர்ந்த 24 லட்சத்து ஏழாயிரத்து 414 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு லட்சத்து 65 ஆயிரத்து 73 பேர் உயிரிழந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு இன்று உறுதிசெய்துள்ளது.
சீனாவிலிருந்து பரவத்தொடங்கிய இந்தக் கொடிய வைரஸ் ஐரோப்பிய, மத்தியக் கிழக்கு நாடுகளில் தீவிரமாகி, கடந்த 26 நாள்களாக அமெரிக்கா, இங்கிலாந்து, ஃபிரான்ஸ், இத்தாலி, தென்கொரியா, இந்தியா ஆகிய நாடுகளில் வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறது.
இந்தியாவில் இந்த வைரஸ் பெருந்தொற்றால் 17 ஆயிரத்து 615 பேர் பாதிக்கப்பட்டும், இரண்டாயிரத்து 858 பேர் குணமடைந்தும் 559 பேர் உயிரிழந்தும் என மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. கரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து நாட்டு மக்களைப் பாதுகாக்க மத்திய - மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றன.
வைரஸ் பெருந்தொற்று தீவிரமடையும் முன் பரவலைத் தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ள புதுச்சேரி அரசு அறிவித்திருந்த ஊரடங்கை மே 3ஆம் தேதிவரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.
பள்ளி-கல்லூரிகள், வழிபாட்டுத் தலங்கள், பொழுதுபோக்கு மையங்கள், அரசு அலுவலங்கள் என அனைத்தும் தொடர்ந்து மூடிவைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், மக்கள் பொது இடங்களில் கூடவும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இந்தப் பணிகளில் காவல் துறை, சுகாதாரத் துறை, வருவாய்த் துறை, பள்ளிக் கல்வித் துறை என அனைத்துத் துறைகளும் ஈடுபட்டுவருகின்றன. இதில் தன்னார்வலர்களும் இணைந்து தம்மாலான பணிகளை முன்னெடுத்துவருகின்றனர். இதேபோல் பல்வேறு அமைப்புகளும் கரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்திவருகின்றன.