நிர்பயா கொலை கைதி பவன் குமார் குப்தா, கடந்தாண்டு டெல்லியில் (கிழக்கு) உள்ள மண்டோலி சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அப்போது ஜூலை 26 மற்றும் 29 ஆகிய தினங்களில் சிறைச்சாலை காவலர் அனில் குமார் மற்றும் அடையாளம் தெரியாத காவலர் ஒருவர் பவன் குமாரை தாக்கியதாக கூறப்படுகிறது.
இதையடுத்து பவன் குமார் குப்தாவுக்கு ஷாதராவிலுள்ள குரு தேஜ் பகதூர் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. அவரது தலையில் ஏற்பட்டிருந்த காயத்துக்கு 14 தையல்கள் போடப்பட்டது. தொடர்ந்து, காவலர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கு டெல்லி பெருநகர மாஜிஸ்திரேட் பிரயங் நாயக் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது இது தொடர்பாக எடுத்த நடவடிக்கைகள் என்னென்ன என்பது தொடர்பான அறிக்கை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டார். மேலும் இந்த வழக்கை அடுத்த மாதம் (ஏப்ரல்) 8ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.