கடந்த 2007-ம் ஆண்டு, மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் நிதியமைச்சராக ப.சிதம்பரம் இருந்தபோது, ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்துக்கு வெளிநாட்டிலிருந்து 305 கோடி ரூபாய் முதலீடு வருவதற்கு, மத்திய நிதியமைச்சகத்தின் கீழ் வரும் அந்நிய முதலீட்டு வாரியம் முறைகேடாக அனுமதி வழங்கியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.
ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் அனுமதி பெறுவதற்குச் சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரமும் உதவினார் எனக் குற்றச்சாட்டு எழுந்தது. கடந்த 2017-ம் ஆண்டு சிபிஐ வழக்குப் பதிவு செய்தது. அதைத் தொடர்ந்து அமலாக்கப் பிரிவும் சட்ட விரோத பணப் பரிமாற்றத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
இந்த வழக்கில், கடந்த ஆண்டு ஆகஸ்ட் 21-ம் தேதி காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரத்தை சிபிஐ கைது செய்து விசாரணை நடத்தியது. அதன்பின்னர் திஹார் சிறையில் அடைக்கப்பட்ட சிதம்பரம், சிபிஐ வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்றார்.