டெல்லியில் ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழக மாணவர் ஆசிப் இக்பால் தன்ஹா, கடந்த பிப்ரவரி மாதம் வன்முறை வழக்கில் கைதாகி சிறையில் உள்ளார். தற்போது, அவருக்கு கல்லூரியில் தேர்வு நடைபெறவுள்ளதால், பிணை கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். கடந்த நவம்பர் 26ஆம் தேதி, வழக்கை விசாரித்த நீதிபதி, மாணவருக்கு பரோல் வழங்கினார். ஆனால், பரோலில் நாள் முழுவதும் வீணாகிவிடும் , சரியாக படித்திட முடியாது என்பதை குறிப்பிட்டும் இடைக்கால பிணை வழங்கக்கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
டெல்லி வன்முறையில் கைதான மாணவர், கல்லூரி தேர்வு எழுதிட அனுமதி!
டெல்லி: கல்லூரி மாணவரின் இடைக்கால பிணை வழக்கை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்றம், டிசம்பர் 4 முதல் 7ஆம் தேதிவரை விருந்தினர் மாளிகையில் தங்கியபடி கல்லூரி சென்று தேர்வு எழுதிட மாணவருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று, இந்த வழக்கு விசாரணை நீதிபதி மனோஜ் குமார் அமர்வில் வந்தது. அப்போது, ஆஜரான துணை தலைமை வழக்கிறஞர் எஸ்.வி.ராஜு, இடைக்கால பிணை மனுவுக்கு எதிர்ப்பு தெரிவித்தார். குற்றஞ்சாட்டப்பட்டவர் சிறையில்தான் படித்து வருகிறார். படிப்புக்கு தேவையான அனைத்து பொருள்களும் சிறையில் உள்ளன. ஏராளமான கைதிகள் படித்து வருகின்றனர். வேண்டுமானால், அவரை தேர்வு மையத்திற்கு அருகில் உள்ள விருந்தினர் மாளிகையில் காவல் துறை பாதுகாப்புடன் தங்க வைக்கலாம்" என பரிந்துரைத்தார்.
வழக்கை விசாரித்த நீதிபதி, லஜ்பத் நகரில் அமைந்துள்ள விருந்தினர் மாளிகையில் ஆசிப் இக்பால் தன்ஹா தங்க அனுமதி வழங்கினார். படிப்புக்கு தேவையான அனைத்து புத்தகங்களையும் எடுத்துச் செல்லலாம். டிசம்பர் 4,6,7 ஆகிய மூன்று நாள்களும், தன்ஹாவை பாதுகாப்பாக தேர்வு மையத்திற்கு அழைத்து சென்றுவிட்டு, மீண்டும் மாளிகைக்கு அழைத்து வர வேண்டிய பொறுப்பு சிறை கண்காணிப்பாளருக்கு உள்ளது. மூன்று தேர்வுகள் முடிந்ததும் அவர் மீண்டும் சிறைக்கு கொண்டு வரப்படுவார். விருந்தினர் மாளிகையில் தங்கியிருக்கும்போது ஒரு நாளைக்கு ஒரு முறை 10 நிமிடங்கள் தனது ஆலோசகருக்கு தொலைபேசி அழைப்பை செய்ய தன்ஹாவுக்கு அனுமதி வழங்கப்படுகிறது" என தீர்ப்பளித்தார்.