புதுச்சேரி: அரியாங்குப்பம் அருகே சட்டவிரோதமாக வீட்டில் பட்டாசு தயாரித்தபோது, ஏற்பட்ட விபத்தில் தம்பதியினர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
புதுச்சேரி அரியாங்குப்பம் அர்தோணியர் கோவில் வீதியைச் சேர்ந்தவர் நெப்போலியன் (43). இவரது மனைவி பத்மாவதி. இவர்களுக்கு கல்லூரி, பள்ளியில் படிக்கும் இரண்டு மகள்கள் உள்ளனர். இந்நிலையில் நெப்போலியன் தனது வீட்டில் அரசு அனுமதி பெறாமல் சட்டவிரோதமாகப் பட்டாசு தயாரித்து விற்பனை செய்துவந்துள்ளார்.
மேலும், பட்டாசு தயாரிக்க தேவைப்படும் மூலப்பொருள்களையும் தனது வீட்டில் மூட்டை மூட்டையாகச் சேமித்துவைத்திருந்தார். இதனிடையே இன்று (செப். 28) நெப்போலியன் வீட்டில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில், பட்டாசுகள் வெடித்து வீடு தரைமட்டமானது. இதில் உள்ளே இருந்த தம்பதியர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.