இது தொடர்பாக, லடாக் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வாக்கு எண்ணிக்கை இன்று காலை 9 மணிமுதல் தொடங்கி நடைபெற்றுவருகிறது.
இதற்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று தேர்தல் முடிவுகள் மாலைக்குள் அறிவிக்கப்படும். வாக்கு எண்ணிக்கை அமைதியான முறையில் நடைபெறுவதை உறுதி செய்வதற்காக, அந்த இடத்தைச் சுற்றி மூன்று அடுக்கு பாதுகாப்பு உள்பட அனைத்து தேவையான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு, மத்திய ரிசர்வ் பாதுகாப்பு படை வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்" என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தேர்தல் பணிகள் சீராக நடத்துவதை உறுதி செய்வதற்காக வேட்பாளர்களின் சிறப்புக் கூட்டம் நேற்று நடைபெற்றது. லடாக் தன்னாட்சி மலை மேம்பாட்டு கவுன்சிலின் 26 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இந்த மாதம் அக்டோபர் 13, 14 மற்றும் 22 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற்றது.
பாஜக, காங்கிரஸ் 26 தொகுதிகளிலும், ஆம் ஆத்மி கட்சி 19 இடங்களிலும், 23 சுயாட்சி வேட்பாளர்களும் என மொத்தம் 94 வேட்பாளர்கள் போட்டியிட்டுள்ளனர்" என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. லே பகுதியில் 294 வாக்குச் சாவடிகளில் நடைபெற்ற இந்தத் தேர்தலில் மொத்தம் 65.07 விழுக்காடு வாக்குகள் பாதிவாகியிருந்தன.
தேசிய மாநாடு மற்றும் மக்கள் ஜனநாயகக் கட்சி தேர்தல்களில் பங்கேற்கவில்லை என்பதால், இந்தச் சூழலை பயன்படுத்திக்கொண்டு ஆம் ஆத்மி கட்சி இத்தேர்தலில் வெற்றி பெற முயற்சிக்கிறது. இத்தேர்தலுக்கு, பாஜக வேட்பாளர்களுக்கு ஆதரவாக சில மத்திய அமைச்சர்களும் தேர்தல் பரப்புரையில் பங்கேற்றனர்.