அண்மையில் பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்காவிற்குச் சென்றிருந்தபோது, இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் கோழிகள் மீதான இறக்குமதி கட்டணம் பற்றி அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் குறிப்பிட்டதாக தெரிகிறது.
அரசியல் ஆயுதம்
இதை, வரும் அமெரிக்க தேர்தலில் தனக்கு பயன் தரக்கூடிய ஒரு கருவியாக, அவர் பயன்படுத்துகிறார். இறக்குமதி கட்டணம் குறைக்கப்பட்டால், அது இந்திய கோழிப்பண்ணைத் தொழிலுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருக்கும் என்று இங்குள்ள தொழில் வட்டாரங்கள் கவலைப்படுகின்றன. ட்ரம்பின் உத்திகளுக்கு பணிந்துவிடக்கூடாது என்று இந்திய அரசுக்கு இந்திய கோழிப்பண்ணை விவசாயிகள் வேண்டுகோள் விடுத்து, அழுத்தமும் தர முயன்று வருகின்றனர். உலகளவில் கோழி இறைச்சியின் நுகர்வு கணிசமாக அதிகரித்துள்ளதால், இந்திய கோழிப்பண்ணைத் தொழில் மீண்டு வருகிறது. இச்சூழலில், அமெரிக்காவில் இருந்து சிக்கன் லெக்பீஸ் பெருமளவில் இறக்குமதி செய்யப்படுவது பற்றிய தகவல்கள், உள்நாட்டு கோழிப்பண்ணை சமூகங்கள் மத்தியில் குழப்பத்தையும் கவலையையும் ஏற்படுத்துகின்றன. அவ்வாறு நடந்தால், கோழி இறைச்சியின் விலை கணிசமாகக் குறைந்து, உள்நாட்டுத் தொழிலுக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறிவிடும்.
கோழிக்கறி இறக்குமதி
தற்போது, கோழி சார்ந்த இறக்குமதிக்கு இந்தியா 100 சதவீத வரி விதிக்கிறது. இதை 30 சதவீதமாக குறைக்க வேண்டும் என்பது அமெரிக்காவின் விருப்பம். கடந்த காலங்களில், இறைச்சி மற்றும் கோழிகளின் விலை வீழ்ச்சியால் கோழித்தொழில் பாதிக்கப்பட்டது.
அண்மையில் இறைச்சி நுகர்வு அதிகரித்திருப்பது கோழி விவசாயிகள், மக்காச்சோளம் மற்றும் சோயா விவசாயிகளுக்கு, வர்த்தகம் சூடுபிடிக்கும் என்ற நம்பிக்கையைத் தருவதாக உள்ளது. இத்தருணத்தில், வெளிநாட்டு உற்பத்திக்கு கதவுகளைத் திறப்பது என்பது பெரும் ஆபத்தானது என்று தொழில் வட்டாரங்கள் எச்சரித்துள்ளன.
லெக் பீஸ்
அமெரிக்காவிலிருந்து சிக்கன் லெக் பீஸ் இறக்குமதி செய்வதற்கு பின்னால் சுவையான காரணங்கள் உள்ளன. அமெரிக்கர்கள் பொதுவாக கொழுப்பு குறைவாக இருக்கும் கோழியின் நெஞ்சு பகுதியை சாப்பிட விரும்புகின்றனர்; சிக்கன் லெக் பீஸ் சாப்பிடுவதில் நாட்டம் கொள்வதில்லை. கோழியில் நெஞ்சுப்பகுதியில் இருப்பதை விட அதன் காலில் உள்ள கொழுப்பின் அளவு அதிகம். எனவே, தான் கோழியின் நெஞ்சுக்கறி மீது அமெரிக்கர்களுக்கு இவ்வளவு மோகம்! அமெரிக்கர்கள் உணவு சாப்பிடும்போது முட்கரண்டி, கத்திகளை பயன்படுத்துகின்றனர். அவர்களின் தயக்கத்திற்கு இன்னொரு காரணமும் உள்ளது; உணவு மேஜை மீது வைத்து கோழிக்காலை சாப்பிடுவதில் அவர்களுக்கு தடுமாற்றமும் சங்கடமும் இருக்கிறது. எனவே அமெரிக்காவில் சிக்கன் லெக்பீஸ் தேவை என்பது மிகவும் குறைவு. அவை குளிர்பதன அறைகளிலேயே முடங்கி கிடக்கின்றன.
மலிவு விலை
முன்பு அமெரிக்கா மூன்றாம் உலக நாடுகளான ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் சீனாவுக்கு சிக்கன் லெக் பீஸ்களை ஏற்றுமதி செய்தது. ஆனால், அந்தந்த நாடுகளின் சந்தைகள், இறைச்சி பொருட்களில் தன்னிறைவு பெற்றுவிட்டன. அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையே வளர்ந்து வரும் வணிகப்போட்டி மற்றும் சீனாவில் கோழி உற்பத்தியில் சீரான அதிகரிப்பால் அமெரிக்காவின் கவனம் இப்போது இந்தியா பக்கம் திரும்பியுள்ளது. 135 கோடிக்கு மேல் மக்கள் தொகை கொண்ட இந்திய சந்தை, அமெரிக்காவிற்கு அதிக நம்பிக்கையை தருவதாக உள்ளது. இந்தியர்கள் கோழிக்கால்களை (லெக் பீஸ்) விரும்புகிறார்கள், இது, அமெரிக்க கோழிப்பண்ணை தொழிலில், அவர்களின் அனைத்து பொருட்களையும் நம்மீது திணிப்பதற்கு சாத்தியமான சந்தையை ஏற்படுத்தித் தருகிறது. கோழி இறைச்சி அமெரிக்காவில் மலிவானது. எனவே இந்த தயாரிப்புகள் மிகமலிவு என்ற முத்திரையோடு இந்திய சந்தைகளை மூழ்கச்செய்துவிடும் என்பதில் சந்தேகமில்லை.
பரிந்துரை
இந்தியாவின் ஆண்டு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கோழிப்பண்ணைத்துறையின் பங்களிப்பு, ஒரு டிரில்லியன் ரூபாய் ஆகும். நாட்டில் ஆண்டுக்கு சுமார் 9,000 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்தியா (சீனாவுக்கு பிறகு), உலகில் அதிக முட்டைகளை உற்பத்தி செய்யும் இரண்டாவது பெரிய நாடு. நாடு முழுவதும் ஆண்டுதோறும் சுமார் 400 மில்லியன் பிராய்லர் கோழிகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. கோழித்தொழிலில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது, முதல் மற்றும் இரண்டாமிடங்களில் முறையே அமெரிக்கா மற்றும் சீனா உள்ளன. ஏழை குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து மிக்க உணவாக முட்டையை பயன்படுத்த வேண்டுமென்று உலக சுகாதார அமைப்பு (WHO) பரிந்துரைக்கிறது. இந்தியாவின் தனிநபர் முட்டை நுகர்வு, தேசிய ஊட்டச்சத்து அமைப்பு (என்ஐஎன்) பரிந்துரைத்த 180 முட்டைகள் என்பதற்கு பதிலாக ஆண்டுக்கு வெறும் 68 முட்டைகளாகவும், பரிந்துரைக்கப்பட்ட 11 கிலோ கோழிக்கறி என்பது, 3.5 கிலோ நுகர்வு என்றளவில் உள்ளது.