கரோனா வைரசைக் கட்டுப்படுத்தும் விதமாக நாட்டில் கடந்த மார்ச் 25ஆம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு, தற்போது சில தளர்வுகளுடன் ஜூலை 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனிடையே குஜராத் மாநிலம் சூரத்தில் கடந்த ஜூலை எட்டாம் தேதி அன்று ஊரடங்கு உத்தரவை மீறி காரில் சுற்றித் திரிந்த அம்மாநில சுகாதாரத் துறை அமைச்சர் குமார் கனானியின் மகன் பிரகாஷ் கனானி மற்றும் அவர்களது நண்பர்களை பெண் காவலர் சுனிதா யாதவ் தடுத்து நிறுத்தியுள்ளார்.
அப்போது ஆத்திரமடைந்த பிரகாஷ் கனானி, பெண் காவலரை மிரட்ட அதற்கு அவர், ஊரடங்கை மீறினால் பிரதமராக இருந்தாலும் தவறுதான் எனக் கூறி, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க காவல் நிலையத்துக்கு உடனே தகவல் கொடுத்துள்ளார். இந்த உரையாடல் சமூக வலைதளங்களில் வைரலாகி பேசுபொருளாகியது.
இதைத் தொடர்ந்து, கடந்த ஜூலை 12ஆம் தேதி அமைச்சரின் மகனும், அவரது நண்பர்களும் கைதுசெய்யப்பட்டு, பிணையில் விடுவிக்கப்பட்டனர். இச்சூழலில் பணியிட மாற்றம் செய்யப்பட்ட சுனிதா யாதவ் தற்போது தனது பதவியிலிருந்து ராஜினாமா செய்துள்ளார்.
இந்நிலையில், தான் ராஜினாமா செய்தது குறித்து ஃபேஸ்புக் நேரலையில் பேசியுள்ளார். அதில் அவர், "எனது எதிர்காலத்தைக் கருத்தில்கொண்டுதான் நான் காவலர் பதவியை ராஜினாமா செய்தேன். அதனால் ஐபிஎஸ் தேர்வுக்கு நான் தயாராகிக் கொண்டிருக்கிறேன். கடினமாக உழைத்து ஐபிஎஸ் அலுவலராக மீண்டும் பதவியில் வந்தபிறகு, அதிகாரத்திலிருக்கும் நபர்கள் குறித்து நான் விரிவாகப் பேசுவேன்.
காவல் துறையில் பெண் காவலர்கள் உட்பட எனது சகப் பணியாளர்களும் நேர்மையாகப் பணியாற்றவே விரும்புகின்றனர். ஆனால், மேலிடத்தில் இருக்கும் அலுவலர்களின் அழுத்தத்தால் அவர்களால் அப்படிச் செய்ய முடியவில்லை.
அந்தச் சம்பவம் நடைபெற்ற நாளன்று ஃப்ரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் என் அருகே இருந்தார். அவர் யார் என்றுகூட எனக்குத் தெரியாது. ஆனால், என்னைப் பொறுத்தவரையில் அவர் கடவுளைப் போல் வந்தார். அவர் இல்லையென்றால், எனக்கு என்ன வேண்டுமானாலும் நடந்திருக்கலாம். ஒருவேளை நிர்பயாவுக்கு நடந்த கதி கூட எனக்கு நடந்திருக்கலாம். மக்களும் மற்றொரு நிர்பயாவுக்கு (எனக்கு) மெழுகுவர்த்தி ஏந்தி விழிப்புணர்வை எடுத்திருப்பார்கள்" என்றார்.