சீனாவிலிருந்து பரவத் தொடங்கிய கரோனா வைரசின் தாக்கம் மற்ற நாடுகளிலும் அதிவேகமாகப் பரவிவருகிறது. குறிப்பாக இந்தியாவில் 137-க்கு மேற்பட்டோருக்கு கோவிட்-19 பெருந்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
ஆந்திரப் பிரதேசத்தில் வைரஸ் பெருந்தொற்று தீவிரமடைந்துவருவதாக அம்மாநில மக்கள் நல்வாழ்வுத் துறை தெரிவித்திருந்தது. இதனால் வைரஸ் பெருந்தொற்று பரவலைத் தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு முன்னெடுத்துவருகிறது.
ஆந்திராவில் மார்ச் 31ஆம் தேதி வரை பள்ளி-கல்லூரிகள், மக்கள் கூடும் வழிபாட்டுத் தலங்கள், பொழுதுப் போக்கு மையங்கள், அரசு அலுவலங்கள் என அனைத்தையும் மூட வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், மக்கள் பொது இடங்களில் கூடவும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
இதன் ஒரு பகுதியாக, திருப்பதி கோயிலில் தரிசனம் செய்ய அதிகளவில் மக்கள் கூடுவதைத் தவிர்ப்பதற்காக நேற்றிலிருந்து தரிசனத்திற்கான நேர இடங்களைக் குறிப்பிட்டு டோக்கன்களை திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் வழங்க தொடங்கி உள்ளது.
கோயில் வளாகத்திற்குள் எத்தனை பக்தர்கள் உள்ளனர் என்பதை உறுதிசெய்யவும், பெரிய அறைகளில் கூட்டம் கூட்டமாக மக்கள் காத்திருப்பதைத் தவிர்க்கவும் இது உதவுமென நிர்வாகம் கூறுகிறது.
திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் நிர்வாக அலுவலர் அனில் குமார் சிங்கால், “ஆந்திரப் பிரதேசத்தில் கரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுப்பதற்காக நடவடிக்கைகளை மேற்கொள்ளும் அரசின் வேண்டுகோளுக்கு இணங்கி, இங்கு எந்தவிதமான தொற்றுப் பரவலும் ஏற்படாமல் தடுக்க நாங்கள் இந்த முடிவை எடுத்துள்ளோம்.
திருப்பதி, திருமலை ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு அலுவலகங்களிலிருந்து ஆதார், வாக்காளர் அட்டை, ஓட்டுநர் உரிமம் போன்றவற்றைக் கொண்டு தரிசனத்திற்கான நேர ஒதுக்கீட்டு டோக்கனைப் பெற வேண்டும்.
அந்த டோக்கனில் குறிப்பிடப்பட்ட நேர இடங்களில் மட்டுமே பக்தர்கள் தரிசனம்செய்ய அனுமதிக்கப்படுவார்கள். இனி பக்தர்கள் வைகுந்தம் வரிசை வளாகத்தின் அறைகளில் அமரவைக்கப்பட மாட்டார்கள். பக்தர்கள் திருமலை திருப்பதி தேவஸ்தானத்துடன் ஒத்துழைக்க வேண்டும். அவர்கள் சரியான நேரத்தில் வரத் தவறினால் அவர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்” எனத் தெரிவித்தார்.
கரோனா அச்சுறுத்தல்: பக்தர்களுக்கு தரிசனத்திற்கான நேர ஒதுக்கீடு செய்ய திருப்பதி கோயில் நிர்வாகம் முடிவு! வொண்டிமிட்டாவில் உள்ள ஸ்ரீ கோதண்ட ராமஸ்வாமி கோயிலின் வருடாந்திர பிரம்மோத்சவத்தின் ஒரு பகுதியாக ஆண்டாண்டு காலமாக நடைபெற்றுவரும் ஸ்ரீ சீதா ராமர் கல்யாணம் விழா நிகழ்ச்சியில் முதல்முறையாக பக்தர்களின் பங்கேற்பு இந்தாண்டு ரத்துசெய்யப்படுகிறது.
திருமலை மலை அடிவாரம், ஸ்ரீவாரி மேட்டுவில் உள்ளிட்ட இடங்களில் தெர்மல் ஸ்கிரீனிங் செய்யப்படுகிறது. கோவில் வளாகம், மலைப்பாதைகள், பேருந்து நிலையங்கள், பக்தர்கள் தங்கும் ஓய்வு இல்லங்கள் உள்ளிட்ட பல பகுதிகளில் கிருமிநாசினி மருந்துகள் தெளிக்கும் பணியில் கோவில் நிர்வாகம் ஈடுபட்டுள்ளது.
மேலும், திருச்சனூரில் உள்ள பத்மாவதி நிலையம் கரோனா அறிகுறி கண்டறியும் மையம் தொடங்கப்பட்டுள்ளது. பரிசோதனையில் பாதிப்பு இருப்பது உறுதிசெய்யப்பட்டால் ருயா மருத்துவமனையில் அமைக்கப்பட்டிருக்கும் சிறப்புச் சிகிச்சைக்கான தனி வார்டுகளில் அனுமதிக்கப்படுவர்.
இந்தப் பெருந்தொற்று வைரஸ் பாதிப்பிலிருந்து மனிதகுலத்தைப் பாதுகாக்க சுவாமியின் அருள் வேண்டி தன்வந்தரி யாகம் ஒன்று திருப்பதியில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
இதையும் படிங்க :இத்தாலியிருந்து திரும்பிய இருவருக்கு கரோனா