உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டா செக்டர் 137இல் உள்ள பெலிக்ஸ் மருத்துவமனையில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு உதவ, கோவிட் ஃபைட்டர் ரோபோ அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
மருத்து துறையில் கரோனா நோயாளிகளுக்கு உதவ ரோபோ அறிமுகம் செய்யப்பட்டுள்ளது இது முதல் முறையாகும். இந்த ரோபோ நேற்று (மார்ச்21) அறிமுகம் செய்யப்பட்டது. இது குறித்து பெலிக்ஸ் மருத்துவமனையின் டாக்டர் டி.கே. குப்தா கூறுகையில், “நாட்டில் மருத்துவத் துறையில் போதுமான பயிற்சி பெற்ற மனித சக்தி இல்லை.
கரோனா நோயாளிகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றனர். இந்த கோவிட் வைரஸ் தாக்குதலை தடுக்க அதிக அளவில் மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்டோர் தேவைப்படுவார்கள். அப்போது மருத்துவ சிகிச்சையில் ஈடுபட்டுள்ள பிற மருத்துவ ஊழியர்களும் நோய்த்தொற்றுக்கு ஆளாக நேரிடும்.
இந்நிலையில் கோவிட் வைரஸ் தாக்குதலுக்கு எதிரான சிகிச்சைக்கு ரோபோக்களை பயன்படுத்தினால் வைரஸ் பரவுதல் வாய்ப்பு மிக குறைவு. செவிலியர்கள் மற்றும் பிற மருத்துவ ஊழியர்கள் சிக்கலான நோயாளிகளுக்கு கவனம் செலுத்த முடியும்.
இந்த வகை ரோபோக்கள் மருத்துவர்களுக்கு வலது கை ஆக செயல்படும். தற்போது உருவாக்கப்பட்டுள்ள ரோபோ நோயாளிகளுக்கு மருந்துகள், உணவு, பிற நுகர்பொருட்களை வழங்குவதற்கும், அகற்றப்படும் கழிவுகளை சேகரிப்பதற்கும், நோயாளிகளுக்கும் சுகாதாரப் பணியாளர்களுக்கும் இடையில் தொடர்பு கொள்ளும் ஒரு சேனலாக செயல்படுகிறது.