கொரோனா பெருந்தொற்று உலகமெங்கிலும் பரவிவருகிறது. இந்நிலையில், இந்தியாவில் தீவிரம் இரண்டாம் கட்டத்தை எட்டியுள்ளது. அதனைக் குறைக்க நகரப் பகுதிகள் மட்டுமில்லாமல் கிராமப் புறங்களிலும் மருத்துவ வசதி ஏற்படுத்த வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
ஊடகவியலாளர் பிரசாந்த் தாண்டான், சமூக செயற்பாட்டாளர் குஞ்சனா சிங் இருவரும் அளித்துள்ள மனுவானது, நாட்டின் மக்கள் தொகையை கணக்கில்கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அதிகப்படுத்த வேண்டும் எனவும், பெருந்தொற்று இருப்பவர்களைத் தனிமைப்படுத்தும் மையங்கள், ஆய்வகங்கள் உள்ளிட்ட அனைத்து தேவைகளையும் அதிகரிக்க வேண்டும் எனவும் குறிப்பிடுகிறது.
இதைப் போல வழக்குரைஞர் ஆஷிமா மண்ட்லா அளித்துள்ள மனுவில், இந்தியாவின் கிராமப்புறங்களையும் கணக்கில் கொண்டு, தற்காலிக மருத்துவமனை படுக்கைகள், அதனுடன் கூடிய பிற சிகிச்சை வசதிகள், வெப்ப திரையிடல் சோதனை, குறிப்பாக, இந்த நடவடிக்கைகளைக் கண்காணிக்க நாடு முழுவதையும் மையப்படுத்திய நிர்வாகத்தையும் உருவாக்க வேண்டும் எனத் தெரிவிக்கிறது.