மத்திய அரசின் உயர் அலுவலர்களிடையே கோவிட்-19 நோய்த் தொற்று தொடர்ந்து அதிகரித்து வருவது மூத்த அலுவலர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. இதனை தொடர்ந்து, ஜூன் 9ஆம் தேதியன்று புதிய அறிவுறுத்தல்களை மத்திய அரசு வெளியிட்டது. அதில், ஒரு அறையில் இரண்டு அலுவலர்களுக்கு மேல் இருக்கக் கூடாது. ஒரே நேரத்தில் துணை செயலரின் கீழ் மொத்தம் 30 அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் மட்டுமே பணியில் இருக்க வேண்டும் என்று கட்டுப்பாடு விதித்துள்ளது.
இந்த புதிய உத்தரவானது, தொற்று பாதிக்கப்படும் மத்திய அரசாங்கத்தின் இரண்டாவது அலுவலராக முதலீட்டுத் துறை செயலாளர் துஹின் காந்த் பாண்டேவுக்கு கடந்த செவ்வாய்க்கிழமையன்று (ஜூன் 9) கோவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து பிறப்பிக்கப்பட்டது. கடந்த வாரம், பாதுகாப்பு செயலர் டாக்டர் அஜய் குமார் மற்றும் மத்திய அரசின் தலைமை செய்தித் தொடர்பாளர் கே.எஸ். தத்வாலியா ஆகியோருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
"அரசாங்க அலுவலகத்தில் நோய்த் தொற்று உறுதி செய்யப்படும் அலுவலர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் வேகமாக அதிகரித்து வருகிறது. அலுவலர்களைப் பாதுகாப்பதில் மிகுந்த முன்னெச்சரிக்கை தேவை” என ஜவுளித்துறை அமைச்சகம் நேற்று (ஜூன் 11) வெளியிட்ட உத்தரவில் கூறப்பட்டிருந்தது. மேலும், ஒரே நேரத்தில் இரண்டுக்கும் மேற்பட்டவர்கள் ஒரு அறையில் இருக்கக்கூடாது என்றும், தனியார் டாக்சிகள் உள்பட பொது போக்குவரத்தை ஊழியர்கள் பயன்படுத்த வேண்டாம், கட்டுப்பாட்டு மண்டலங்களிலோ அல்லது அதன் அருகில் வசிப்பவர்கள் அலுவலகத்திற்கு வருவதை தவிர்க்க வேண்டும் என்று அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
தூய்மை பணி மேற்கொள்ளும் நோக்கத்திற்காக கட்டடம் மூடப்பட்டிருப்பதாக முதலீடு மற்றும் பொது சொத்து மேலாண்மை துறை ஊழியர்களுக்கு தெரிவித்த அலுவலக குறிப்பாணை, இரண்டு அலுவலர்களுக்கும் முதலீட்டுத் துறை செயலருக்கும் நோய்த் தொற்று இருப்பதை உறுதிப்படுத்தியது. துஹின் காந்த் பாண்டே விஷயம் மட்டுமல்ல, பாதுகாப்பு செயலர் டாக்டர் அஜய் குமார், பிஐபி தலைவர் கே.எஸ். தத்வாலியா ஆகியோரை தவிர, நிதி அமைச்சகத்தின் செயலர் ரீட்டா மால், சட்டம் மற்றும் நீதி அமைச்சகத்தின் இணை செயலர் டாக்டர் நாராயண் ராவ் பட்டு ஆகியோரும் சமீபத்தில் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மத்திய அரசாங்கத்தின் விளம்பரக் குழுவின் முதன்மை இயக்குநர் ஜெனரலான தத்வாலியா, சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் மற்றும் வீட்டு விவகார அமைச்சின் கூட்டு கோவிட் மாநாட்டில் உரையற்றினார். இதனிடையே, தத்வாலியாவின் ஓட்டுநருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவருடன் நெருக்கமாக பணியாற்றி வரும் அனைத்து அலுவலர்களும் தங்களைத் தாங்களே தனிமைப்படுத்திக் கொண்டனர்.