உலகளவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் கரோனா வைரஸ் பெருந்தொற்று பாதிப்பால் இதுவரை 185 நாடுகளைச் சேர்ந்த இரண்டு லட்சத்து 76 ஆயிரத்து 170 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 11 ஆயிரத்து 405 பேர் உயிரிழந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு இன்று உறுதிசெய்துள்ளது.
இந்தக் கொடிய வைரஸ் தற்போது இந்தியாவில் பெரும் அச்சுறுத்தலாக மாறியிருக்கிறது. இந்த வைரஸ் பெருந்தொற்றால் 258 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர். கரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து நாட்டு மக்களைப் பாதுகாக்க மத்திய - மாநில அரசுகள் நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றன.
வைரஸ் பெருந்தொற்று தீவிரமடையும் முன் பரவலைத் தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முன்னெடுத்துவருகிற மாநில அரசுகள் மார்ச் 31ஆம் தேதி வரை பள்ளி-கல்லூரிகள், வழிபாட்டுத் தலங்கள், பொழுதுப்போக்கு மையங்கள், அரசு அலுவலங்கள் என அனைத்தையும் மூட வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், மக்கள் பொது இடங்களில் கூடவும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
கேரள மாநிலத்தில் வைரஸ் பெருந்தொற்று தீவிரமடைந்துவருவதால் வைரஸ் பெருந்தொற்று பரவலைத் தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு முன்னெடுத்துவருகிறது. கேரளாவில் மார்ச் 31ஆம் தேதி வரை பள்ளி-கல்லூரிகள், மக்கள் கூடும் வழிபாட்டுத் தலங்கள், பொழுதுப் போக்கு மையங்கள், அரசு அலுவலங்கள் என அனைத்தையும் மூட வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், மக்கள் பொது இடங்களில் கூடவும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
இதன் ஒரு பகுதியாக, வைரஸ் தொற்று மேலும் தீவிரமடையாமல் தற்காக்க சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பக்தர்கள் வழிபட நுழைவதற்குத் தடைவிதிக்குமாறு பதனம்திட்டா மாவட்ட நிர்வாகத்திடமும் திருவாங்கூர் தேவசம் வாரியத்திடமும் கேரள அரசு வேண்டுகோள்விடுத்திருந்தது.
சபரிமலை அமைந்துள்ள பதனம்திட்டா மாவட்டத்தில், முதன்மை நிலையில் 235 பேரும், இரண்டாம் நிலையில் 501 பேரும் வீட்டு தனிமைப்படுத்தப்பட்ட தீவிர மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். இன்று ஒன்பது பேர் கோவிட்-19 வைரசால் பாதிக்கப்பட்டுள்ளது உறுதிசெய்யப்பட்டிருக்கிறது.