உலக பெருந் தொற்றுநோயான கரோனாவால் கேரளாவில் நேற்று (ஜூலை 27) 702 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, இந்நோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 19 ஆயிரத்து 727ஆக உயர்ந்துள்ளது. இதில், 10 ஆயிரத்து 54 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 40 பேர் சிகிச்சை பலனின்றி இறந்தனர். கேரளா முழுவதும் 495 இடங்களை ஹாட்ஸ்பாட் ஆக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
இது குறித்து கேரள முதலமைச்சர் பினராய் விஜயன் கூறுகையில், "கரோனாவுக்கு எதிரான போராட்டம் நீடிக்கும். கரோனா தொற்று தற்போது சுகாதார பிரச்னையாக மட்டுமல்லாது சமூகம், பொருளாதார பிரச்னையாகவும் மாறிவிட்டது. பரவலைக் கட்டுப்படுத்த அரசு அமல்படுத்தியுள்ள விதிமுறைகளை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இந்த தொற்று நோய்க்கான சிகிச்சை அரசு மருத்துவமனையில் இலவசமாக செய்யப்படுகிறது.
இந்த தொற்று நோய் சிகிச்சைக்காக தற்போது 101 கோவிட் முதல்-நிலை சிகிச்சை மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த மையங்களில் 12 ஆயிரத்து 801 படுக்கை வசதிகள் உள்ளன. இதில் 45 விழுக்காடுகள் தற்போது நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.