தமிழ்நாடு

tamil nadu

கரோனா வைரஸ் தாக்குதல் - தற்காத்துக் கொள்வது எப்படி?

By

Published : Jan 28, 2020, 2:24 PM IST

Updated : Mar 17, 2020, 5:01 PM IST

கரோனா வைரஸ் சீனாவில் பிறந்து, உலகெங்கும் பரவி வருகிறது. இது ஒற்றை வைரஸ் அல்ல. ஒன்றுக்கும் மேற்பட்ட வைரஸ்களின் தொகுப்பாகும். இந்த நிமிடம் வரை தமிழ்நாட்டில் இந்த வைரஸ் பரவவில்லை என்பது ஆறுதல் அளிக்கிறது. இந்த வைரஸ் மனிதர்கள், விலங்குகள், பறவைகள் ஆகிய முப்பிரிவினரைத் தாக்க வல்லது. இவ்வைரஸ் தாக்கப்பட்ட பின் ஏற்படும் அறிகுறிகள், தற்காப்பு வழிமுறைகள் பற்றி பார்க்கலாம்.

Corona virus symptoms and prevention methods Corona virus symptoms and prevention methods
Corona virus symptoms and prevention methods

அறிகுறிகள்:

இந்த வைரஸ் தாக்கினால் மெலிதான காய்ச்சலுடன் இருமல், மூச்சுத் திணறல் உள்ளிட்ட சுவாசக் கோளாறுகள் ஏற்படும். மேலும் தொண்டை வீங்குவதும், உணவை விழுங்குவதில் சிரமமும் ஏற்படும். சில நேரங்களில் நிமோனியா போன்ற விஷக்காய்ச்சலும் ஏற்படக்கூடும். பிரான்சிட்டிஸ் (bronchitis) எனப்படும் நுரையீரல் நோயும் ஏற்படலாம்.

சுருங்கக் கூறின், மனிதர்களைப் பொறுத்தமட்டில், இந்த கரோனா வைரஸ் தாக்கினால், ஒட்டு மொத்த சுவாசப் பாதையும் (respiratory track) பாதிக்கப்பட்டு, SARS (Severe Acute Respiratory Syndrome) எனப்படும் உயிரைப் பறிக்கும் மூச்சுத் திணறல் நோய்கள் ஏற்படவும் வாய்ப்பு உண்டு. ஒருவருக்கு இந்நோய் கண்டிருப்பது உறுதியானால், அவர் க்வாரன்டைன் (quarantine) செய்யப்பட வேண்டும். அதாவது, தனிமைப்படுத்தப்பட வேண்டும்.

மருந்து:

இந்த வைரஸ் தாக்குதலால் விளையும் நோய்க்கு மருந்து இல்லை என்று உலக சுகாதார நிறுவனம் (WHO) அறிவித்துள்ளது. இதற்கான தடுப்பூசியும் (vaccine) இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.

இதிலிருந்து தற்காத்துக் கொள்வது எப்படி?:

  • ஒவ்வொரு முறையும் எதையேனும் உண்பதற்கு முன்பாக, கைகளை நன்றாக சோப்புப் போட்டுக் கழுவ வேண்டும். டெட்டால், சாவ்லன் போன்ற கிருமி நாசினி சோப்புகள் மற்ற சோப்புகளை விட ஓரளவு மேலானவை.
  • கை, கால், விரல் நகங்கள் நன்றாக வெட்டப்பட்டிருக்க வேண்டும். அந்தரங்கச் சுத்தம், உணவுச் சுத்தம் (personal and food hygiene) போன்றவை கறாராகப் பின்பற்றப்பட வேண்டும்.
  • நன்கு காய்ச்சி வடிகட்டிய நீரையே அருந்த வேண்டும்.
  • இறைச்சி, முட்டை, மீன் ஆகியவற்றை முழுமையாக வேகவைத்த பின்னரே உண்ணுமாறு உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது. எனவே முக்கால் வேக்காட்டு இறைச்சியை உண்பதைத் தவிர்க்கவும். குறிப்பாக அரைவேக்காட்டு (Half boiled) முட்டையை உண்ண வேண்டாம். சீன உணவகங்களுக்குச் சென்று (Chinese restaurants) சீன உணவுகளை உண்பதை, பாதுகாப்புக் கருதித் தவிர்க்கலாம்.

இதையும் படிங்க: பாம்புகளிடமிருந்து பரவும் கரோனா வைரஸ்?

  • முதியவர்கள் (60 வயதுக்கு மேலானவர்கள்), நோயாளிகள், சிகிச்சைக்குப் பின் உடல்நலம் தேறி வருவோர், ஜீரண சக்தி குறைந்தோர் ஆகியோர் அசைவ உணவுகளைத் தவிர்த்து, புரதச் சத்து மிகுந்த பயிறு வகைகள், காய்கறிகளை உண்ணலாம். இச்சூழலில் இதுவே பாதுகாப்பானது.
  • மிகவும் குறைவாக சுகாதாரம் பேணும் தெருவோரக் கடைகள், கையேந்தி பவன்கள் ஆகியவற்றில் உண்பதைத் தவிர்க்கலாம்.
  • இயன்றவரை கிருமித் தொற்று (infection) ஏற்பட வாய்ப்புள்ள பெருங்கூட்டம் கூடும் இடங்களுக்குச் செல்வதை கர்ப்பிணிகள், குழந்தைகள், நோயாளிகள், சிகிச்சைக்குப் பின் உடல் நலம் தேறி வருவோர், முதியவர்கள் ஆகியோர் தவிர்க்க வேண்டும். ஏனெனில் இருமல், தும்மல், கண்ட இடங்களில் துப்பப்படும் சளி, எச்சில் ஆகியவற்றின் மூலம் இந்த வைரஸ் காற்றில் பரவும் தன்மைகொண்டது.
  • கூட்டம் நிறைந்த இடங்களுக்குச் செல்ல வேண்டிய தேவை உள்ளவர்கள், குறிப்பாக கர்ப்பிணிகள், நோயாளிகள், ஆஸ்துமா, சளித்தொல்லை உள்ளவர்கள், முதியவர்கள், சிகிச்சைக்குப் பின் உடல்நலம் தேறி வருவோர் ஆகியோர் உரிய முகமூடி (nose mask) அணிந்து அவ்விடங்களுக்குச் செல்லலாம்.
  • மருந்துக் கடைகளில் ரூ. 10க்கு விற்கும் முகமூடிகள் உரிய பயனைத் தராது. ரூ. 80 அல்லது ரூ. 100 விலையில் நன்கு வடிகட்டக் கூடிய பாதுகாப்பான முகமூடிகள் (nose masks) கிடைக்கின்றன. அவற்றை அணியலாம்.

எந்த நோயையும் வெல்லும் ஆற்றல் இன்றைய மருத்துவ அறிவியலுக்கு உண்டு. நாம் செய்ய வேண்டியதெல்லாம் நோய்த்தடுப்பு சக்தியை அளிக்கக் கூடிய சத்துள்ள ஆகாரத்தை உண்பதுதான்.

எனவே மேற்கூறிய பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்துகொண்டாலே வைரஸ் பரவும் அச்சம் தவிர்த்து அனைவரும் இயல்பு வாழ்க்கையை வாழலாம்.

இதையும் படிங்க: 'கரோனா வைரஸ்' - யாவரும் அறிந்துகொள்ள வேண்டிய உண்மை

Last Updated : Mar 17, 2020, 5:01 PM IST

ABOUT THE AUTHOR

...view details