கரோனா தொற்று காரணமாக பிரதமர் மோடி தேசிய ஊரடங்கு பிறத்துள்ள நிலையில், அதனை செயல்படுத்திய விதம் பலரை பாதித்துள்ளது. முன்னறிவிப்பு இல்லாமல் இதனை செயல்படுத்தியது முக்கியமான குறைபாடு, இதனால் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர். போக்குவரத்து வசதியில்லாமல் தங்கள் ஊர்களுக்கு பயணிக்கும் இவர்கள், மாநில எல்லைகளில் தடுத்து நிறுத்தப்படுகின்றனர்.
ஏழைகளின் நிலை குறித்தும் அரசாங்கம் சிந்திக்கத் தவறியுள்ளது. மூன்று வார கால தேசிய அளவு முடக்கத்தை ஏழைகள் எப்படி சமாளிப்பார்கள். தேசிய அளவு முடக்கத்துக்குப் பிறகாவது அவர்களின் அவல நிலையைப் போக்க அரசாங்கம் வழிவகை செய்திருக்க வேண்டும். தேசிய அளவு முடக்கத்துக்கு முன்பு ஏழைகளை பாதுகாப்பது குறித்து திட்டம் தீட்டியிருக்க வேண்டும். ஆனால் அப்படி எதுவும் திட்டம் தீட்டாமல் உடனடியாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டது.
இதேபோல் தொழிற்சாலைகளை மூடுவதிலும் சரியான திட்டம் வகுக்கப்படவில்லை. கரோனா வைரசுக்கு எதிராக போராட வேண்டிய சூழலில், மருத்துவ உபகரணங்கள் தயாரிக்கும் நிறுவனங்களும் கேள்வி கேட்பாரின்றி மூடப்பட்டது.
தனிமைப்படுத்துதல் கரோனா வைரஸ் பரவலை தடுக்கும் என்பதற்கு உதாரணமாக பல நாடுகள் உள்ளன. ஊரடங்கை செயல்படுத்துவதில் குறைபாடு இருந்தாலும், இந்தியாவில் அது கரோனா பரவலை குறைத்துள்ளது. ஆனால் இந்த மூன்று வார முடக்கம், கரோனா வைரஸ் தொற்றை அழிக்கும் என நினைப்பது முட்டாள்தனம். இந்த தேசிய அளவு முடக்கம் நமக்கு அளித்துள்ள நேரத்தில், கரோனா பரிசோதனை, பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காணுதல், மருத்துவ சீரமைப்பு உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள வேண்டும். அனைவருக்கும் பரிசோதனை செய்வது சாத்தியமல்ல, கரோனாவால் பாதிக்கப்பட்ட அறிகுறி இல்லாதவர்களிடமிருந்து கூட வைரஸ் பரவும் வாய்ப்புள்ளது.
சுகாதாரப் பணியாளர்களுக்கு அனைத்து வகையான பாதுகாப்பு உபகரணங்களும் கிடைக்க வழிசெய்ய வேண்டும். அவர்கள்தான் கரோனாவுக்கு எதிரான போரில் முன்வரிசையில் நிற்கும் வீரர்கள். ஆனால் இங்கு சில சுகாதாரப் பணியாளர்களுக்கே முகக்கவசம் கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
தேசிய அளவு முடக்கத்தால் ஏழைகளின் அவலநிலை:
இந்த தேசிய அளவு முடக்கத்தால், ஏழைகள் மிக மோசமான சூழலுக்கு தள்ளப்பட்டிருக்கின்றனர். இந்தியாவில் உள்ள பெரும்பான்மையான ஏழைகள் சுகாதாரமற்ற சூழலில், நோய் எதிர்ப்பு சக்தி குறைவான நிலையில் வாழ்ந்து வருகின்றனர். கரோனா தொற்றுக்கான பரிசோதனையை மேற்கொள்வதற்கு அவர்களிடம் பணம் இருக்காது. தனியார் மருத்துவ பரிசோதனை நிலையங்கள், கரோனா பரிசோதனைக்கு ஆயிரக்கணக்கில் பணம் வசூலிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.