நாட்டில் கரோனா வைரஸ் பாதிப்பு குறைந்தபாடில்லை. வைரஸ் தடுப்புப் பணியில் மத்திய, மாநில அரசுகள் தீவிரமாகப் பணியாற்றி வருகின்றன. நூற்றுக்கணக்கான மருந்துகள் பரிசோதனைக் கட்டத்தில் உள்ளன.
இந்நிலையில், கரோனா தடுப்பூசி விநியோகத்திற்கு வரும் பட்சத்தில், ஏழை மக்கள் இலவசமாக அதனைப் பெற்று கொள்ளலாம் என மத்தியப் பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், "கரோனா தடுப்பூசி மருந்து பரிசோதனை தொடங்கிய நாள் முதலே, ஏழை மக்களிடம் ஒரு கேள்வி எழுந்து வருகிறது. தங்களால் அந்தத் தடுப்பூசி மருந்தை வாங்க முடியுமா என்ற கேள்வி தான் அது. இன்று நான் கூறுகிறேன், தடுப்பூசி வரும் பட்சத்தில் ஏழை மக்களுக்கு நிச்சயமாக, இலவசமாக அவை விநியோக்கபடும் என்பதை தெளிவுப்படுத்துகிறேன்" என்றார்.
முன்னதாக பிகாரில் பாஜக வெற்றிபெறும் பட்சத்தில் அனைவருக்கும் இலவசமாக கரோனா தடுப்பூசி வழங்கப்படும் என பாஜக தன் தேர்தல் அறிக்கையில் தெரிவித்திருந்த நிலையில், தற்போது அதே வழியிலே பல மாநிலங்களும் அறிவிப்பு வெளியிட்டு வருகின்றன.