அரசு மருத்துவமனையில் கரோனா பரிசோதனை மையம்: ஆட்சியர் தகவல்
புதுச்சேரி: காரைக்காலில் இந்த வார இறுதியில் கரோனா பரிசோதனை மையம் செயல்படத் தொடங்கும் என அம்மாவட்ட ஆட்சியர் அர்ஜூன் சர்மா தெரிவித்துள்ளார்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அர்ஜூன் சர்மா கூறுகையில், "காரைக்காலில் ட்ரூனட் முறையில் கரோனா பரிசோதனை செய்வதற்காக கருவி இன்று (ஆகஸ்ட் 26) காரைக்கால் வருகிறது. இந்த வார இறுதியில் காரைக்கால் அரசு பொது மருத்துவமனையில் கரோனா பரிசோதனை மையம் செயல்படத் தொடங்கும.
ரேபிட் ஆன்டிஜன் கருவி மூலம் பரிசோதனை செய்யும் முறையும் மேற்கொள்ளப்படவுள்ளது. மேலும், திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டு ஆர்.டி.பி.சி.ஆர். முறையிலான பரிசோதனையும் மேற்கொள்ளப்படுகிறது. இவற்றின் மூலம் காரைக்கால் மாவட்டத்தில் கரோனா பரிசோதனை முடிவுகளைத் தெரிந்துகொள்வதற்கு ஆகும் காலதாமதம் இனி குறையும்.
மாவட்டம் முழுவதிலும் குறிப்பாக காரைக்கால் நகரப் பகுதியில் அதிகமான அளவில் மூத்த குடிமக்களுக்கே கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 50 வயதுக்கு மேற்பட்டவர்கள், ரத்த அழுத்தம், நீரிழிவு, சிறுநீரக பாதிப்பு, உடல் உறுப்பு அறுவை சிகிச்சை செய்துகொண்டவர்கள் மிகவும் கவனத்துடன் இருக்க வேண்டும். அவர்கள் தானாக வீட்டுத் தனிமையில் இருப்பது நல்லது.
நகரப் பகுதியில் பல்வேறு இடங்களில், கடைகளில் மக்கள் தகுந்த இடைவெளியைக் கடைப்பிடிக்காமல் இருப்பதைக் காண முடிகிறது. பொது இடங்களிலும், தனியிடங்களிலும் மக்கள் கண்டிப்பாகத் தகுந்த இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும், முகக்கவசம் அணிய வேண்டும். அப்போதுதான் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த முடியும்.
கரோனா தடுப்பு முன்களப்பணியில் ஈடுபட்டுள்ளோர் பாதுகாப்புடன் இருக்க வேண்டும். காரைக்கால் அரசு பொது மருத்துவமனையிலிருந்து பரிந்துரைக்கப்படும் பட்சத்தில் கரோனா நோயாளிகளுக்குத் தேவையான இட வசதி உள்ளிட்ட ஏற்பாடுகளைத் தயார் நிலையில் வைத்திருக்குமாறு ஏற்கனவே தனியார் மருத்துவமனைகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது" எனக் கூறினார்.