குஜராத்தின் சூரத் நகரில் ஒரே அறையில் தங்கி நண்பர்கள் இருவர் கூலி வேலை செய்து வந்தனர். நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கால் நாதியற்று போன இருவரும் கால் வயிற்றுச் சோற்றுக்கே கண்ணீர் வடித்துள்ளனர். பிழைப்பு தேடி சென்றவர்களையெல்லாம் பீதியடைய வைத்த கரோனாவால் நண்பர்கள் இருவரும் மீண்டும் உத்திரப் பிரதேசம் மாநிலம் பாஸ்தி மாவட்டத்தில் உள்ள தங்களின் சொந்த ஊருக்குச் செல்ல முடிவெடுத்து, பெட்டி படுக்கைகளை கட்டிக்கொண்டு அவ்வழியாக சென்ற லாரியில் ஏறி இருவரும் புறப்பட்டனர்.
அந்த லாரியில் இப்படி பிழைப்பு தேடிச் சென்ற வேறு சிலரும் இருந்தார்கள். இந்நிலையில் ஒரு நண்பனுக்குத் திடீரென்று காய்ச்சல் ஏற்பட்டு, அதிகரித்துக்கொண்டே போனது. இதனால், லாரியில் இருந்தவர்கள் அவனை மத்திய பிரதேசம் மாநிலம் ஷிவ்புரி மாவட்டத்தில் கொலாரா நகர நெடுஞ்சாலையில் இறங்கிவிடக் கட்டாயப்படுத்தினர். அவன் இறங்கியபோது, கூடவே அவனுடைய நண்பனும் இறங்கிவிட்டான்.
ஆம்புலன்ஸ் வருகிற வரையில் நண்பனின் தலையைத் தனது மடியில் வைத்துக்கொண்டு, உதவிக்காக துடித்து கொண்டிருந்தான். பின்னர் ஷிவ்புரி மருத்துவமனையில் நண்பனை சேர்த்து விட்டு பெருமூச்சு விட்டவனுக்கு 'அவன் இறந்தான்' என்ற செய்தி செவிகளுக்குள் நுழைந்து கிறுகிறுக்க வைத்தது. அவனது இறப்பால் தனிமைப்பட்ட நண்பன், தற்போது கரோனா தனிமைப் பிரிவு கண்காணிப்பில் இருக்கிறான். இதனையடுத்து இருவரது உடல்களிலிருந்தும் எடுக்கப்பட்ட மாதிரிகள் கரோனா பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன.