பெங்களூரு :கரோனா பலரின் அன்றாட வாழ்க்கையையே கடுமையாக பாதித்திருக்கிறது. பலரும் வேலையிழந்து, பொருளாதார ரீதியில் கடும் சிக்கலுக்கு உள்ளாகியிருக்கிறார்கள். ஆனால், இந்தக் கரோனா அரிதினும் அரிதாக சிலரது வாழ்வில் மகிழ்ச்சியையும் கொண்டு வந்துள்ளது. ஆம். 22 ஆண்டுகளுக்குப் பிறகு கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை தனது குடும்பத்துடன் இணைத்திருக்கிறது கரோனா.
கர்நாடாக மாநிலத்தைச் சேர்ந்த ஆடாம் மாலிக் சாபா என்ற இளைஞர் 22 வருடங்களுக்கு முன்பு தனது சகோதரருடன் மகாராஷ்டிர மாநிலம், புனேவுக்கு வேலைக்குச் சென்றுள்ளார். அங்கு மெக்கானிக்காக பணியாற்றிவந்த அவர், 1998ஆம் ஆண்டு மும்பைக்குச் செல்லும் வழியில் காணாமல் போயுள்ளார். அப்போது இருந்து சுமார் ஆறு ஆண்டுகாலம் ஆடாமை அவரது பெற்றோர் தேடியுள்ளனர்.
பின்னர் எங்கு தேடியும் அவர் கிடைக்காத நிலையில், அவரைத் தேடுவதை கைவிட்டனர். ஆனால், அவரது தாய் மட்டும் மகன் நிச்சயம் ஒருநாள் வீடு திரும்புவார் என நம்பிக்கையுடன் காத்திருந்து வந்துள்ளார். இதற்கிடையில், ஆடாம் மாலிக் பல்வேறு இடங்களில் பணிபுரிந்து வந்துள்ளார்.
சோலாபூரிலுள்ள உணவகத்தில் நீண்ட நாள்களாக அவர் வேலைப்பார்த்து வந்த நிலையில், கரோனா ஊரடங்கினால் அவரது வேலை பறிபோயுள்ளது. இந்நிலையில், என்ன செய்வதென தெரியாது ஆடாம் நிராயுத பாணியாக நின்றபோது, தன் வீட்டின் நினைவு வந்து, பழைய நினைவுகளைப் பின்தொடர்ந்து ஊர் வந்தடைந்துள்ளார்.