கர்நாடக மாநிலத்தில் ஜூன் மாத தொடக்கத்திலிருந்து கரோனா வைரஸ் தாக்கம் படிப்படியாக அதிகரித்துவருகிறது. அம்மாநிலத்தில் இதுவரை பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிலும் குறிப்பாக தலைநகர் பெங்களூருவில்தான் இதன் தாக்கம் படுமோசமாக உள்ளது. கர்நாடகாவில் இதுவரை கரோனாவால் 164 பேர் உயிரிழந்துள்ளனர். அதில் அதிகபட்சமாக பெங்களூருவில் மட்டும் 78 பேர் உயிரிழந்துள்ளனர்.
'மீண்டும் லாக்டவுன் வேண்டாம் என்றால் ஒத்துழைப்பு தாருங்கள்' - எடியூரப்பா - பெங்களூருவில் ஊரடங்கு உத்தரவு
பெங்களூருவில் மீண்டும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்த வேண்டாம் என்று நினைத்தால், கரோனா வைரசைக் கட்டுப்படுத்துவதற்கு மக்கள் தகுந்த இடைவெளியைப் பின்பற்ற வேண்டும் என்று கர்நாடக மாநில முதலமைச்சர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.
இதனால் மீண்டும் பெங்களூருவில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில் இதுகுறித்து அம்மாநில முதலமைச்சர் எடியூரப்பா கூறுகையில், "கரோனா வைரஸ் தொற்று மாநிலத்தில் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இதனைக் கட்டுப்படுத்த நாங்கள் அனைத்து முயற்சிகளையும் எடுத்துவருகிறோம். அதன் ஒரு பகுதியாக பெங்களூருவில் சில பகுதிகளில் சீல் வைத்துள்ளோம். இதுதொடர்பாக இன்று அமைச்சர்கள், அலுவர்களுடன் ஆலோசனை நடத்தினோம்.
மேலும் நாளை நடைபெறவுள்ள ஆலோசனைக் கூட்டத்திற்கு பெங்களூருவைச் சேர்ந்த அனைத்துக் கட்சி எம்எல்ஏக்களுக்கும் அமைச்சர்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளேன். பெங்களூருவில் மீண்டும் ஒரு ஊரடங்கு உத்தரவை அமல்படுத்த வேண்டாம் என நினைத்தால் மக்கள் அனைவரும் தகுந்த இடைவெளியைக் கடைப்பிடித்து அரசாங்கத்திற்கு ஒத்துழைக்க வேண்டும்" என்றார்.