காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து மத்தியப் பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி குறித்து கருத்து தெரிவித்த ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, "காங்கிரஸ் அரசை கவிழ்க்க சதித்திட்டம் தீட்டிச் செயலாற்றுகிறார்கள். தொடர்ந்து ஜனநாயகத்தின் மீது அவர்கள் போர்த் தொடுத்துவருகிறார்கள். தங்களது அதிகாரத்தை வைத்து இந்த ஜனநாயக விரோத முயற்சிகளை அவர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.
மத்தியப் பிரதேச சட்டப்பேரவையில் அனைவரும் சபாநாயகரின் முடிவே இறுதி முடிவாக ஒப்புக் கொள்ளவேண்டும். சபாநாயகர் எந்த முடிவை எடுத்தாலும் அது செயல்படுத்தப்படும். வெளியேறியவர்கள் எங்கள் பக்கம் மீண்டும் திரும்பலாம். நாங்கள் நம்பிக்கையை இன்னும் இழக்கவில்லை” என்றார்.
இது தொடர்பாக மத்தியப் பிரதேச சட்டப்பேரவை சபாநாயகர் நர்மதா பிரசாத் பிரஜாபத் கூறியதாவது, "ராஜினாமாக்களை ஒன்று அல்லது வேறு வழிமுறையில் எனக்கு அனுப்பிய எம்எல்ஏக்களின் பதிலுக்காக நான் காத்திருக்கிறேன். ராஜினாமா செய்ய முடிவெடுத்த அவர்கள் என்னை நேரடியாக ஏன் தொடர்பு கொள்ளவில்லை?. மத்தியப் பிரதேச சட்டப்பேரவையின் உறுப்பினர்களுக்குள் என்ன நடக்கிறது என்பது குறித்து நான் கவலைப்படுகிறேன். இது நமது நாட்டின் ஜனநாயகத்தின் நிலை என்னவாக இருக்கிறதென்பது குறித்து கேள்விகளை எழுப்புகிறது" என்று அவர் கூறினார்.