இமய மலையையும் தென் சீனாவையும் பிறப்பிடமாகக் கொண்டவை சிவப்பு பாண்டாக்கள். இது சிக்கிமின் மாநில விலங்காகும். இவை பெரும்பாலும் மூங்கில்களையே உணவாக உட்கொள்கின்றன. இந்நிலையில், இப்பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலூட்டிகள் அழிவின் விளிம்பில் உள்ளதாக பிபிசி நிறுவனம் கடந்த வெள்ளிக்கிழமை செய்தி வெளியிட்டது. அதில் சிவப்பு பாண்டாவும் ஒன்றாகும்.
சிவப்பு பாண்டா ஆரம்பத்தில் ராக்கூன் வகையைச் சேர்ந்ததாகக் கருதப்பட்டது. ஏனெனில், சிவப்பு பாண்டாவின் வாலும், ராக்கூனின் வாலும் பார்ப்பதற்கு ஒரே மாதிரியாக இருக்கும். கஞ்சன்ஜங்கா மலை அருகிலுள்ள காடுகளில் அழிவின் விளிம்பில் இருக்கும் சிவப்பு பாண்டாக்களைப் பாதுகாக்கவும் கண்காணிக்கவும், அவற்றின் மீது ஜிபிஎஸ் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன.
அழிவை சந்தித்து வரும் சிவப்பு பண்டா கரடிகள் இந்த ஜிபிஎஸ் கருவி துல்லியமான தரவுகளைக் கொடுப்பதால், பாண்டாக்களைக் கண்காணிக்க பேருதவியாக இருப்பதாக வன விலங்கு பாதுகாவலர்கள் கூறுகின்றனர். ஆறு பெண் பாண்டா, நான்கு ஆண் பாண்டாக்கள் என மொத்தம் பத்து பாண்டாக்களைக் கண்காணிக்கும் நோக்கில் நேபாள அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. சிவப்பு பாண்டா பாதுகாப்பு குழு என்ற நிறுவனத்துடன் வனவிலங்குப் பாதுகாவலர்கள் இணைந்து கேமராக்களைப் பயன்படுத்தி, பாண்டாக்களைக் கண்காணித்துவருகின்றனர்.
இதுகுறித்து நேபாள வனவிலங்குத் துறை இயக்குநர் மன் பகதூர் கட்கா கூறுகையில், சிவப்பு பாண்டா பாதுகாப்பு நடவடிக்கைகளில், இது ஒரு சிறந்த மைல்கலாக இருக்கப் போகிறது என்றார். அழிவின் விளிம்பில் இருக்கும் சிவப்பு பாண்டாக்களைப் பாதுகாக்க, கடந்த ஓராண்டு மேற்கொண்ட ஆய்வுப் பணிகள் உதவும் என வனவிலங்குப் பாதுகாவலர்கள் கருதுகின்றனர்.
இதையும் படிங்க:கோவிட்-19 தாக்கம்: குழந்தை தொழிலாளர்கள், ஐ.நா. அச்சம்!