இந்தியா தற்போது பொருளாதார மந்தநிலையையும், பெருமளவிலான வேலையிழப்பையும் சந்தித்துவருவதாக பல்வேறு புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
நாட்டின் வேலையின்மை குறித்த புள்ளிவிவரத்தை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்ற காலாண்டில் நகர்ப்புற பகுதிகளில் வேலைவாய்ப்பின்மை 9.3 விழுக்காடாக உள்ளதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. கடந்தாண்டு இதே காலத்தில் 9.8 விழுக்காடாக இருந்த வேலையின்மை தற்போது 0.5 விழுக்காடு குறைந்திருப்பது சற்று ஆறுதலுக்குரிய விஷயமாகக் கருதப்படுகிறது.
மேற்கு வங்க மாநிலம் அசான்சூலில் உள்ள காங்கிரஸ் கட்சியினர் வேலையின்மை பிரச்னை மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் தெரியப்படுத்தும் விதமாக பக்கோடா வறுத்து நூதன போரட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சோபிக் முகர்ஜி கூறுகையில், நாட்டில் அதிகரித்து வரும் வேலையின்மைக்கு எதிராக நாங்கள் குரல் கொடுத்து வருகிறோம். இதனை இந்த அரசுகளிடம் தெரிவிக்கும் வண்ணம் பக்கோடக்களை வறுத்து விற்பனை செய்கிறோம். எங்களின் இந்த நிலைமைக்கு அரசுகள் தான் காரணம் என்றார்.
சமீபத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையில் கூட வேலைவாய்ப்புகள் குறித்த பெரிய அறிவிப்புகள் இடம்பெறவில்லை. இது குறித்து ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், நாட்டின் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு தேவை. ஆனால், அதனை வழங்குவதில் உங்கள் அரசு படுதோல்வி அடைந்துள்ளது” என்று குற்றஞ்சாட்டியிருந்தார்.
இதையும் வாசிங்க: வேலையின்மை குறித்த புள்ளிவிவரத்தை வெளியிட்ட மத்திய அரசு!