மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி சந்தித்ததையடுத்து அக்கட்சியின் தலைவர் பதவியிலிருந்து ராகுல் காந்தி விலகினார். இதையடுத்து இடைக்காலத் தலைவராக சோனியா காந்தி தற்போது செயல்பட்டுவருகிறார்.
இந்நிலையில் காங்கிரஸ் கட்சிக்குப் புதிய தலைவரை விரைவில் தேர்வு செய்யவேண்டும் என மூத்தத் தலைவர்கள் குரல் கொடுக்கத் தொடங்கியுள்ளனர். காங்கிரஸ் மக்களவை உறுப்பினரும் மூத்தத் தலைவருமான சசி தரூர், ”பிரிவினைவாத அரசியலை முன்னெடுக்கும் பாஜகவுக்கு எதிராக காங்கிரஸ் மட்டுமே மாற்று அரசியலை முன்னெடுக்க முடியும். அதற்குத் தயாராகும் விதமாக காங்கிரஸ் விரைவில் தலைவரைத் தேர்வுசெய்ய வேண்டும்” எனத் தெரிவித்தார்.
இந்தக் கருத்தை வழிமொழியும் விதமாக முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியின் மகனும், காங்கிரஸ் மூத்தத் தலைவருமான அனில் சாஸ்திரி, ”காங்கிரஸ் கட்சி தலைவருக்கு நேரு-காந்தி குடும்பத்தை அல்லாதோர் தலைமை தாங்குவது கட்சியை அழித்துவிடும். இந்திரா காந்தியைப் போல் கள அரசியல் தெரிந்த பிரியங்கா காந்தி காங்கிரஸ் தலைவர் பதவிக்கு வரவேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சிக்கு நேரு-காந்தி குடும்பத்தினரைத் தவிர வேறு யாரும் தலைவராக முன்வரத் தயங்கிவருகின்றனர். தலைவர் பதவிக்கு மீண்டும் வர ராகுல் விருப்பம் காட்டாத நிலையில் பிரியங்கா காந்தியை தலைவராக நியமிக்க வேண்டும் என்ற குரல் கட்சிக்குள் அதிகரித்துவருகிறது.
இதையும் படிங்க:ட்ரம்ப் பார்க்கப்போவது 'புதிய இந்தியா'வை - முகேஷ் அம்பானி கருத்து