டிசம்பர் 28ஆம் தேதியான இன்று அகில இந்திய காங்கிரஸ் (ஐஎன்சி) நிறுவப்பட்டு 135 ஆண்டுகள் நிறைவடைந்து 136ஆவது ஆண்டில் அடியெடுத்துவைக்கிறது.
இந்த நாளில் மாநில, மாவட்ட தலைமையகத்தில் கட்சி தொடக்க நாளை கொண்டாடவும், அலுவலக பொறுப்பாளர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள், எம்எல்சிக்கள் விழாக்களில் பங்கேற்கவும் காங்கிரஸ் தலைமை கேட்டுக்கொண்டது.
மேலும், அக்கட்சியின் தலைமை வெளியிட்ட செய்திக்குறிப்பில், "இந்த நாளில் தகுந்த இடைவெளியுடன் நெறிமுறைகளைப் பின்பற்றி திரங்க யாத்திரை நடத்தப்படும். இதுபோன்ற பிற புதுமையான பரப்புரைகளும் ஏற்பாடு செய்யலாம். வேளாண் சட்டங்களுக்கு எதிராக காலவரையின்றி போராட்டத்தில் அமர்ந்திருக்கும் நம்முடைய போராடும் விவசாயிகளுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும்.
மதச்சார்பற்ற, ஜனநாயக, ஒருங்கிணைக்கப்பட்ட இந்தியாவை உருவாக்கும் முயற்சிகளில் காங்கிரஸ் முன்னணியில் உள்ளது. அனைத்து இடையூறுகளையும் தடைகளையும் மீறி எப்போதும் இந்தியாவை முதலிடத்தில் வைத்திருக்கிறது.
இந்திய தேசிய காங்கிரஸ் நாட்டின் சுதந்திரத்திற்காகப் போராடி வென்றது; இந்தியா சுதந்திரம் அடைந்தபோது உலகின் மிக வறிய நாடுகளிலிருந்து ஒரு உலக வல்லரசாக கட்டமைத்தது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி இன்று திரங்க யாத்திரை மூலம் கட்சியின் தொடக்க நாளை கொண்டாடுகிறது.
இந்திய தேசிய காங்கிரஸ் டிசம்பர் 28, 1885 இல் உருவாக்கப்பட்டது. அதன் முதல் மாநாடு மும்பையில் அன்றைய தினம் தொடங்கி அந்த ஆண்டு டிசம்பர் 31 வரை நடந்தது. அப்போது உமேஷ் சந்திர பானர்ஜி இந்திய தேசிய காங்கிரசின் முதல் தலைவராக இருந்தார்.