புதிய நாடாளுமன்ற கட்டடத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து ராஜீவ் சூரி உள்ளிட்டோர் தொடுத்த பொதுநல வழக்குகளை விசாரித்துவந்த உச்ச நீதிமன்ற நீதிபதி ஏ.எம். கான்வில்கர் தலைமையிலான அமர்வு, அந்தத் திட்டத்திற்கு இன்று (ஜன. 05) அனுமதி அளித்தது.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த ரன்தீப் சிங் சுர்ஜேவாலா, “13 ஆயிரத்து 450 கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ளப்படவுள்ள சென்ட்ரல் விஸ்டா திட்டமானது, சட்டப்பூர்வமான பிரச்னை அல்ல; வரலாற்றின் பக்கங்களில் தனது பெயரை பொறிக்க முற்படும் விசித்திரமான ஓர் சர்வாதிகாரியின் தலைமையிலான அரசின் தவறான முன்னுரிமைகளில் முதலிடத்தைப் பெற்ற திட்டம் என்றுதான் அதனைக் கருத வேண்டும்.
கரோனா தொற்றுநோய்ப் பரவல் நெருக்கடி, பொருளாதார மந்தநிலை இவற்றுக்கு மத்தியில் நாட்டு மக்கள் வாடிவரும் சூழலில் டெல்லி நாடாளுமன்றம், அரசு அலுவலகங்களை ரூ.20 ஆயிரம் கோடி மதிப்பில் சீரமைப்பு செய்யும் பணிகளை மத்திய அரசு மேற்கொண்டுவருகிறது. சென்ட்ரல் விஸ்டா திட்டத்திற்கு ரூ.14,000 கோடியும், பிரதமருக்கு தனி சொகுசு விமானங்களை வாங்க ரூ.8,000 கோடியும் ஒதுக்க முடிகிறது.
ஆனால், நாடு முழுவதும் உள்ள 113 லட்சம் ஆயுதப்படையினர், மத்திய அரசின் ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்பட வேண்டிய கொடுப்பனவுகளிலிருந்து ரூ.37,530 கோடிகளைக் குறைக்கிறது. லடாக்கில் சீன ஊடுருவல்களைத் துணிச்சலாக எதிர்கொண்ட நமது எல்லைப் பாதுகாப்பு வீரர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்களையும், குளிரில் தங்க வசதியான கூடாரங்களையும் வழங்க பாஜக தலைமையிலான மத்திய அரசுக்கு நேரமில்லை.
பாதுகாப்புப் படைகளைச் சேர்ந்த 15 லட்சம் வீரர்களுக்கும், ராணுவ ஓய்வூதியம் பெறும் 26 லட்சம் ஓய்வூதியர்களுக்கு வழங்கப்பட வேண்டிய ரூபாய் 11 ஆயிரத்தை முடக்குகிறது. இதனை எல்லாம் பிரதமர் மறந்துவிடக் கூடாது