வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் பைரேன் சிங் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்றுவருகிறது. இந்த ஆட்சியில் அங்கம் வகித்த மூன்று அமைச்சர்கள் உள்பட ஆறு பேர் வியாழக்கிழமை அரசுக்கு அளித்துவந்த ஆதரவை விலக்கிக் கொண்டனர்.
முன்னதாக பாஜக சட்டப்பேரவை உறுப்பினர்கள் மூன்று பேர் கட்சியிலிருந்து விலகினர். இந்நிலையில் மாநிலத்தில் ஆட்சியமைக்க உரிமைகோர உள்ளதாக முன்னாள் முதலமைச்சர் ஓக்ரம் இபோபி சிங் தெரிவித்துள்ளார்.
மேலும் பாஜக அரசு, தனது பெரும்பான்மையை சட்டப்பேரவையில் நிரூபிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். 2017 சட்டப்பேரவைத் தேர்தலில் மாநிலத்தில் ஆட்சியமைக்கும் தனிப்பெரும்பான்மை யாருக்கும் கிடைக்கவில்லை.
60 தொகுதிகளில் 28 தொகுதிகளில் வென்றிருந்த காங்கிரஸ் தனிப்பெரும் கட்சியாக விளங்கியது. இருப்பினும் 21 தொகுதிகளில் வெற்றிபெற்றிருந்த பாஜக மாநில கட்சிகள், சுயேச்சை ஒருவரின் ஆதரவுடன் அம்மாநிலத்தில் ஆட்சியமைத்தது.