தெலங்கானாவில் கரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரை தெலங்கானாவில் 14 ஆயிரத்து 419 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டு, 247 பேர் உயிரிழந்தனர். இதனிடையே சில நாள்களுக்கு முன் கரோனாவால் பாதிக்கப்பட்ட ஒருவர், ''தனக்கு ஏற்பட்டு சுவாசப் பிரச்னைக்கு மருத்துவர்கள் சரியாக சிகிச்சை வழங்காததால் நான் கொஞ்சம் கொஞ்சமாக செத்துக் கொண்டிருக்கிறேன்'' என பேசிய வீடியோ வெளியாகியது.
இது பல்வேறு தரப்பினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சரியாக சிகிச்சை வழங்காமல், மக்களின் உயிரில் அரசு விளையாடி வருகிறது என மாநில அரசை காங்கிரஸ் கட்சியினர் விமர்சித்தனர். இந்நிலையில் முன்னாள் மக்களவை உறுப்பினர் பொன்னம் பிரபாகர் மாநில மனித உரிமை ஆணையத்திற்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.