மத்தியப் பிரதேச காங்கிரஸ் முகமாக இருந்து வந்த ஜோதிராதித்ய சிந்தியா பாஜகவில் சேர்ந்ததைத் தொடர்ந்து, அவரது ஆதரவாளர்களான 22 சட்டப்பேரவை உறுப்பினர்கள் ராஜினாமா செய்தனர். இதனால், காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்து பாஜக அங்கு ஆட்சி அமைத்தது. சிவராஜ் சிங் சவுகான் முதலமைச்சராகப் பதவியேற்றுக் கொண்டார்.
இதனால் ஏற்கனவே காலியாக இருந்த இரண்டு இடங்களைச் சேர்த்து 24 இடங்களுக்கு இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில், ஜோதிராதித்ய சிந்தியாவின் சொந்த தொகுதியான குணா உள்ளிட்ட 11 மாவட்டங்களில் புதிய செயலாளர்களை காங்கிரஸ் நியமித்துள்ளது. சிந்தியாவின் ஆதரவாளர்களைக் கொண்டே அவரது சொந்த தொகுதிகளைக் கைப்பற்றி விடலாம் என காங்கிரஸ் திட்டமிட்டுவருகிறது. மறுபுறம், சிந்தியாவின் ஆதரவாளர்களுக்கு பாஜக சார்பில் தொகுதிகள் ஒதுக்கப்படும் எனக் கூறப்படுகிறது.